Latest News

  

பினாமி ஆட்சியை அகற்றுவோம்.. மக்கள் விரும்பும் ஆட்சி அமைய செய்வோம்..தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

 
லஞ்ச ஊழலில் திளைக்கும் குற்றவாளி நடத்தும் பினாமி ஆட்சியை சட்டப்பூர்வமாகவும், அமைதியான ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி விட்டு, மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சியை நிலைபெறச் செய்வது தான் நமது ஒரே செயல்திட்டம் என்று சூளுரை ஏற்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கழகத்தினரைக் காணும் போதெல்லாம் களிப்புறுவதும், அவர்களுடன் உரையாடி உற்சாகமடைவதும், தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்திக் கழகத் தோழர்களுடன் களம் புகுவதில் தனிச்சுகம் அடைவதும் என வாழ்வில் ஒவ்வொரு நாளும், "இன்று புதியதாய்ப் பிறந்தோம்" என்ற இன்பம் ஏற்படுகிறது என்றாலும், ஆண்டுக்கொரு முறை மலர்கின்ற பிறந்தநாள், உங்களின் பேரன்பால் மேலும் ஊக்கமும் உத்வேகமும் ஊட்டுகிறது. ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்ற கவலையை விட, அனுபவமும் அது வழங்கிடும் ஆற்றல்மிகு பாடங்களும் பல்கிப் பெருகி வருகின்றன. சவால்களை - அவற்றின் பரிமாணங்களை அறிந்து நேருக்கு நேர் எதிர்கொண்டு வென்றுகாட்ட முடியும் என்ற நன்னம்பிக்கை நாள்தோறும் உள்ளத்தில் நங்கூரமிடுகிறது.

கருணாநிதியின் வாஞ்சைமிகு வளர்ப்பில்-வளம்செறிந்த வழிகாட்டுதலில்-நித்தமும் அவரது ஒளிநிறைந்த நிழலில் வளர்ந்தவன் என்பதால் அரசியல்-பொதுவாழ்வுப் பணிகள் என் உதிரத்தில் இரண்டறக் கலந்துவிட்டன. நெருக்கடிகள்-எதிர்ப்புகள் எனும் நெருப்பாற்றில் நீந்தி கழகத்தைத் கருணாநிதி கண்ணை இமை காப்பது போல் கட்டிக் காத்திட்ட வேளையில், இளைஞர் அணி எனும் விழுதுகளாக திமுக எனும் ஆலமரத்துக்குத் துணை நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி- பேராசிரியர் உள்ளிட்ட மூத்த முன்னோடிகளின் அன்பினாலும் ஆலோசனைகளாலும் இளைஞரணி என்பது பட்டாளத்துச் சிப்பாய் போல களத்தில் இன்முகம் காட்டி முன் நின்றது. இளைஞரணியின் தோழர்கள் பரவசத்தோடு தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து, மக்களுக்கு நலம்பயக்கும் உதவிகளைச் செய்து வருவது கண்டு மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன். பொதுவாழ்வே பெரிதெனக் கொள்வோர்க்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது இயலாத காரியம் என்றாலும், என்னுடைய பொதுவாழ்வுப் பணிக்கு குடும்பத்தினர் காட்டும் ஆதரவும், அக்கறையும் இந்த இயக்கமே ஒரு மகா குடும்பம் என்கிற முறையில் அவர்கள் வழங்கும் ஒத்துழைப்பும் என்னுடைய பயணம் சீரான பாதையில் செல்வதற்கு ஏதுவாக அமைகின்றன. என் பிறந்தநாளை கழகக் குடும்பத்தின் விழாவாக எனது குடும்பத்தாரும் இணைந்து கடைப்பிடிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். இயக்கத்தினர்-குடும்பத்தினர் மட்டுமின்றி மாற்றுக்கட்சி நண்பர்களும், அரசியல் சாராத அன்பிற்கினிய பொதுமக்களும் பொழிகின்ற வாழ்த்துகள் என்மீது மட்டுமின்றி, நமது கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளன. தமிழகம் மோசமானதும் நெருக்கடிமிக்கதுமான அரசியல் சூழலில் அகப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், அதனை மீட்டுருவாக்கிட வேண்டிய பெரும் பொறுப்பு கழகத்திற்குத் தான் இருக்கிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கருணாநிதியின் மகத்தான வழிகாட்டுதலில் செயல்படும் இந்த இயக்கம் எப்போதும் தமிழ்-தமிழர் நலன் சார்ந்தே சுழலும். காவிரியாற்று நீரில் நமக்குள்ள உரிமையை நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் உறுதிபட நிலைநாட்ட முடியாத நிலையிலும், கழக ஆட்சியில் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும் நலனும் பாதுகாக்கப்பட்டன. பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் நேராதவாறு தடுக்கப்பட்டன. விவசாயிகள்-நெசவாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்வுரிமையும் போற்றப்பட்டன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.