முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரே நாளில் 6 எம்.பிக்களின்
ஆதரவு கிடைத்துள்ளது. சொந்த மாவட்டமான தேனி எம்.பியும் அவருக்கு ஆதரவு
கொடுத்தது ஓ.பன்னீர் செல்வத்தை குஷியாக்கியுள்ளது. அவருக்கு ஆதரவான
எம்.பிக்களின் எண்ணிக்கையும் 11 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே
போகிறது. எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு பிடித்து வைத்துக் கொண்டதால்
அவர்களில் பலர் பன்னீர் முகாமுக்கு வர முடியாத நிலை. ஆனால் எம்.பிக்கள்
சாரை சாரையாக வருகின்றனர்.
நேற்று வரை 5 எம்.பிக்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்திருந்தது. இன்று
மேலும் 6 எம்.பிக்கள் வந்து விட்டனர். இன்று காலை தூத்துக்குடி ஜெயசிங்
தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் செங்குட்டுவன் மற்றும் பெரம்பலூர் மருதராஜா
ஆகிய 3 எம்.பிக்கள் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து 2 எம்.பிக்கள் வந்து
சேர்ந்தனர். ராஜ்யசபா உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் லோக்சபா
தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஓ.பி.எஸ். அணிக்குத் தாவினர்.
ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டமே ஓ.பி.எஸ் பக்கம் வந்ததால் ஓ.பி.எஸ் தரப்பு
உற்சாகமடைந்தது.
இதற்கு உச்சமாக இன்று இரவு தேனி எம்.பி. ஆர். பார்த்திபன் வந்து
சேர்ந்தார். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய
வெற்றியாகும். சொந்த மாவட்ட எம்.பியே அவர் பக்கம் வந்திருப்பது நிச்சயம்
ஓ.பி.எஸ் அணிக்கு பெரிய விஷயம்தான்.
ஏற்கனவே மைத்ரேயன், நாமக்கல் பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக்குமார்,
திருப்பூர் சத்யபாமா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவிலிருந்து
நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பாவும், முதல்வருக்கே ஆதரவு
தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
அதிமுகவிடம் மொத்தம் 50 எம்.பிக்கள் (லோக்சபா, ராஜ்யசபாவில்) உள்ளனர்.
அதில் 11 பேர் தற்போது ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளது சசிகலாவை அதிர
வைத்துள்ளது.
No comments:
Post a Comment