ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை
விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில்
மாணவர்கள் 14 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் கைது
செய்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதே போன்று சென்னை மெரினா கடற்கரையில் சென்னையில் உள்ள பல்வேறு
கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை 7 மணிக்கு ஒன்று
கூடினார்கள்.
சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தை நிறுத்திக் கொள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனை
ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
மேலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போராட்டம் நடக்கும் இடத்திற்கு
வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று
மாணவ, மாணவிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால் சென்னையில் காலை 7
மணிக்கு தொடங்கிய போராட்டம் 14 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்துக்
கொண்டிருக்கிறது.
இதனிடையே அதிகாரிகள் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது. ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது முதல்வர் நேரில் வந்து உறுதி
அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிகொள்வதாக போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment