தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த
ஜெயலலிதாவிற்கு அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கும்பிடு போடுவதே தனி
ஸ்டைல். சிலர் அதீத பணிவு என்ற பெயரில் தரையோடு தரையாக குனிவார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் சில சமயம் கார் டயரைக் கூட தொட்டு கும்பிடுவார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் இப்போது காட்சிகள் மாறிவிட்டன.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய யாரும் பணிவுடன் குனிந்து
கும்பிட்டதாக தெரியவில்லை. அதே நேரத்தில் குனிந்து கும்பிடுவது பற்றி
விமர்சனம் செய்தவர்கள் பலரும் ஜெயலலிதா உடலுக்கு தலை தாழ்த்தி அஞ்சலி
செலுத்தினர்.
ஜெயலலிதா நல்லடக்கம்
ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சசிகலா,
இளவரசி மற்றும் ஜெயலலிதா வீட்டில் நீண்ட காலமாக வேலை பார்த்த ராஜம்மாள்
என்ற வயதான பெண்மணி உள்பட வீட்டில் வேலை பார்க்கும் இளம்பெண்களும்
சசிகலாவுடன் வந்திருந்தனர். ஜெயலலிதா சமாதியில் 5 அடி தொலைவுக்கு
தடுப்புவேலி அமைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது. சசிகலா வந்தவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
போலீசார் தடுப்புவேலியை திறந்துவிட்டனர்.
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி
ஜெயலலிதா சமாதியில் இரண்டு முறை சசிகலா விழுந்து கும்பிட்டார். பூக்களை
தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் கண்ணீர் வரவே, இளவரசி உடனடியாக
கை குட்டையை கொடுத்தார். அனைவரும் ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்தனர்.
பின்னர் சிறிது நேரம் அங்கேயே சோகத்துடன் நின்றுவிட்டு சிறிது நேரத்தில்
கிளம்பினர்.
குனிந்து வளைந்து கும்பிடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினரும் அமைச்சர்களும் எப்படி பணிவுடன்
வளைந்து நெளிந்து கும்பிடுவார்களோ அதேபோல சசிகலாவையும் வளைந்து நெளிந்து
கும்பிட்டு வழியனுப்பினர். முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும்
சசிகலாவை பணிவுடன் குனிந்து கும்பிட்டது அங்கிருந்த பொதுமக்களை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
சசிகலா புறப்பட்ட உடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்
ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.
தலைமை அலுவலகம் சார்பில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு
வழங்கும் இடம், மருத்துவ முகாம் ஆகியவற்றை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதன்பின்னர் ஜெயலலிதா சமாதியில்
நினைவிடம் அமைப்பது தொடர்பாக அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ள
பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம்
மேற்கொண்டார்.



No comments:
Post a Comment