ஜெயலலிதா மறைவால் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தத்தளிக்கும்
அதிமுகவை கபளீகரம் செய்வதில் பாஜக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. இதன் முதல் கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைக்க பாஜக
முயற்சிப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது முதலே அதிமுக விவகாரங்களில் பாஜக
தலையிட தொடங்கியது. இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என முதலில்
நெருக்கடி கொடுத்தது. பின்னர் ஜெயலலிதா வசம் இருந்த பொறுப்புகள் யாரிடம்
கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தலையை நுழைத்தது.
புதிய முதல்வர் விவகாரம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே அவர் எதிர்த்து வந்த மத்திய அரசின்
திட்டங்களுக்கு திடீரென தமிழக அரசை ஒப்புக் கொள்ள வைத்தது. ஜெயலலிதா
மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக யாரை நியமிக்க வேண்டும் என்பதிலும்
தலையிட்டது பாஜக.
வெங்கையா நாயுடு
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பகிரங்கமாக, அதிமுகவும்
பாஜகவும் ஒன்றுதான்; ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக
பேச்சுவார்த்தை நடத்தி வந்தது எனக் கூறியிருந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில்?
இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் நேற்று வெங்கையா நாயுடுவிடம்
செய்தியாளர்கள், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, தமிழகத்தில் தற்போது தேர்தல் இல்லை.
ஆகையால் கூட்டணி பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்றார்.அதே நேரத்தில்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா? என்ற கேள்விக்கு நேரடியாக
வெங்கையா நாயுடு பதிலளிக்கவில்லை.
தீவிரமான நடவடிக்கைகள்
தற்போதைய நிலையில் அதிமுகவையும் தமிழக அரசையும் தம்முடைய கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள முனைப்புடன் இருக்கிறது பாஜக. இதன் முதல் கட்டமாக தேசிய
ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக
மேற்கொண்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment