கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்
செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனு மீதான விசாரணையின் போது புதிய நோட்டுகள் தற்போதுள்ள நிலையில்
அச்சடித்தால் அது பிடித்துவைத்துள்ள பூனையை அவிழ்த்துவிட்டதற்கு சமமாகி
விடும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊழல், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த
நவம்பர்-8 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிக மதிப்புள்ள 500 1000 ரூபாய் பழைய
நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது.
இதனால் நாடுமுழுவதும் ஏழை-எளிய மக்கள் கடும் இன்னல்களை அன்றாடம்
சந்தித்து வருகின்றனர். வங்கி வாசல்களில் பணம் எடுக்க அவர்கள்
காத்துக்கிடக்கும் அவலம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு நாடு முழுவதும்
கடும் எதிரப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த
விடாமல் முடக்கி வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்
பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மத்திய அரசின்
சார்பில் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி ஆஜராகி வருகிறார்.
இந்த மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர்
அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணை நடத்தப்பட்டது, அப்போது, மத்திய அரசின்
அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி, அதிக புதிய ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்காமல் இருப்பதற்கு விளக்கம் அளித்து வாதிட்டார்.அவர் கூறியதாவது:
மொத்த தொகையில் 86 சதவீதம் 500 1000 ரூபாய் நோட்டுகள் தான்
புழக்கத்தில் உள்ளன. எனவே, தற்போதுள்ள நிலையில் அதிக ரூபாய் நோட்டுகள்
அச்சடிப்பது பையில் பிடித்து வைத்துள்ள பூனையை அவிழ்த்துவிட்டது போல
ஆகிவிடும். மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை போக்க மத்திய அரசு தேவையான
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் நோட்டுகள் டெப்பாசிட் செய்வதற்கும் மத்திய
அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது வங்கிகள் அனுமதிக்கப்பட்ட
தொகையை கொடுக்க முன்வருவதில்லை ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசின் நிதிக் கொள்கையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அது
ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்றும் ரோத்தகி
தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மக்கள் கஷ்டப்படாமல்
இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் இந்த
விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். பணத்தை
அதிகம் அச்சடித்தால் மக்கள் அதை வைத்தே பொருள் வாங்குவர் என்பதால்,
டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடத்தி, அனைத்தையும், கணக்கிற்குள்
கொண்டுவரும் நோக்கத்தோடே மத்திய அரசு ரூபாய் அச்சடிப்பதை குறைத்துள்ளது
இதன்மூலம் தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment