ஜெயலலிதா மறைந்த நிலையில், இதுவரை தொடர்ந்து வந்த பங்காளி சண்டையை
மறந்து திமுக-அதிமுக கட்சியினர் அரசியல் நாகரீகத்தை பேண ஆரம்பித்துள்ளனர்.
திமுக-அதிமுக இரு கட்சியினரையும் இந்தியா-பாகிஸ்தான் சிப்பாய்கள் போலவே
மாற்றி வைத்திருந்தனர் இரு கட்சி தலைமையும். ஒரு கட்சி பிரமுகரின் இல்ல
திருமணத்திற்கு கூட மறு கட்சி பிரமுகர் செல்ல முடியாத நிலை. கருணாநிதியை
அரசியலில் இருந்து ஒழிப்பதே தனது வேலை என ஜெயலலிதா பல்வேறு சமயங்களில்
முழங்கியுள்ளார்.
பிற மாநிலங்களில் அரசியல் நாகரீகம் செழித்து வளர்ந்திருந்த நிலையில்,
தமிழகத்தில் மட்டும் இவ்விரு கட்சிகளும் செயற்கையான மோதலை உருவாக்கி வந்ததை
பொதுமக்கள் வெறுப்போடுதான் பார்த்து வந்தனர்.
வெளியே புலி, வீட்டில் எலி
வெளியே இப்படி எலியும், பூனையுமாக இருந்தாலும், உள்ளுக்குள் சில பல
திரைமறைவு ஒப்பந்தங்கள் ஜரூராகவே நடந்து வந்தன. டாஸ்மாக் மதுபான சப்ளை
ஆர்டர் போன்றவை அதற்கு சில உதாரணங்கள். இரு ஆட்சி காலங்களிலும்
ஒருவருக்கொருவர் தொழில் விவகாரங்களில் விட்டுக்கொடுத்தது கிடையாது.
அரசியல் நாகரீகம்
இந்த நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
காலகட்டத்தில், திமுக பொருளாளர் ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி ஆகியோர்
அப்பல்லோவுக்கு சென்று அதிமுக நிர்வாகிகளிடம் ஜெயலலிதா உடல் நலம் குறித்து
நலம் விசாரித்து, அரசியல் நாகரீகத்திற்கு அடித்தளம் போட்டனர். ஜெயலலிதா
மறைவுக்கு பிறகு, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று, கருணாநிதி அஞ்சலி
செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
அதிமுக தலைவர்கள்
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான லோக்சபா துணை சபாநாயகர்
தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், கருணாநிதி
சிகிச்சை பெற்றுவரும் காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்று நலம்
விசாரித்தனர்.
இதன்மூலம் இவ்விரு கட்சிகள் நடுவேயான பனிப்போர் விலகி அரசியல் நாகரீகம்
தளைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
அடுத்த தலைமுறை அரசியல்
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். ஜெயலலிதா
மறைந்துவிட்டார். எனவே அடுத்த தலைமுறை அரசியலில், இந்த காழ்ப்புணர்ச்சி
மறக்கடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னமும் அதிமுகவில் தொடரும்,
காலில் விழும் சுயமரியாதை குறைவான விஷயங்கள் மட்டும் தவிர்க்கப்பட்டால்
வெளியுலகத்திலிருந்து பார்ப்போருக்கு தமிழகம் ஒரு முதிர்ச்சியான அரசியல்
களமாக தெரியும் என்பது சமூக ஆர்வலர்கள் பார்வை.
சசிகலாவின் சாமர்த்தியம்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவரது தோழி சசிகலா,
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுடன் தொடர்பில் இருந்ததாக
செய்திகள் வெளியாகியிருந்தன. சசிகலா புஷ்பாவின் நெருக்கடிகளை தவிர்க்க
அவருக்கு அட்வைஸ் செய்ய ராஜாத்தி அம்மாளையே சசிகலா நாடியதாக தகவல்
வெளியானது. சசிகலாவின் சாதுர்யமான காய் நகர்த்தல்கள் அதிமுகவின் உட்கட்சி
பிரச்சினைகளுக்கு எதிராக திமுகவை அதிகமாக கிளறச் செய்யாமல் வைத்துள்ளது
என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


No comments:
Post a Comment