என்னவென்று விசாரிக்காமலேயே பத்திரிகைகள் எங்களை மிரட்டுகின்றன என்று
சசிகலாவின் கணவர் எம். நடராஜன் ஊடகங்கள் மீது பரபரப்பு
குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் குமணனுக்கு அமெரிக்க
நாட்டின் புலிட்சர் விருது கிடைத்துள்ளதற்கு பாராட்டு விழா மதுரை காமராஜர்
சாலையில் உள்ள ராஜபாலா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் பேசும்
போது, ஜெயலலிதாவின் மறைவினால் நானும் என் குடும்பமும் மன உளைச்சளுக்கு
ஆளாகி இருக்கும் நிலையில் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாகவும், வெளியில்
எங்கும் செல்ல முடியாத நிலையிலும் இந்த நிகழ்விற்கு வந்ததற்கு காரணம்
தமிழனுக்கு கிடைத்த விருது என்பதுதான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இங்குள்ள பல பத்திரிகைகள் பல விஷயங்களை
விசாரிக்காமலேயே எங்களை மிரட்டி எழுதி வருகின்றன. இதேபோன்று மிரட்டல்
கட்டுரைகளை அமெரிக்காவில் எழுதினால் நஷ்ட ஈடுகள் பெறலாம் என்றும் நடராஜன்
கூறினார்.
மேலும், நம்ம ஊரில் விருதுகளை விலை கொடுத்து வாங்கப்படுவது போன்று
அமெரிக்காவில் வாங்கப்படுவதில்லை. பத்மா விருதுகள், ரத்னா விருதுகளை எனக்கு
வழங்க பலர் என்னை அணுகினார்கள். நான் அதனை தவிர்த்துவிட்டேன்.
பழ.நெடுமாறன் தந்தை காந்தியை வழிமறித்து தனது தங்க மோதிரத்தை கழட்டிக்
கொடுத்துவிட்டு, காந்தியின் கோர்ட்டை வாங்கிப் போட்டவர். அப்படிப்பட்ட
குடும்பத்தில் பிறந்தவர்தான் குமணன். நோபல் பரிசு உள்பட இன்னும் பல
பரிசுகளை பெற தமிழர்கள் முயற்சிக்க வேண்டும். தமிழ்ச் சங்கம் வளர்ந்த
மதுரையில் ஒரு தமிழன் அமெரிக்காவில் விருதை பெறுவது நமக்கு பெருமை என்று
நடராஜன் பேசினார்.
இந்தப் பாராட்டு விழாவில், பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment