திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வாமை நோயால் ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த
1ம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார கால
சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். மீண்டும்
அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, வியாழக்கிழமையன்று இரவு மீண்டும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை
குறித்து விளக்கம் அளித்துள்ள காவேரி மருத்துவமனை, கருணாநிதிக்கு தொண்டை,
நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலை
சரி செய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை
சீராக உள்ளது. கருணாநிதிக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு
வருகின்றன என கூறியுள்ளது.
காவேரி மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் என்று திமுக தலைமை அறிவித்த
நிலையிலும் பல அரசியல் கட்சித்தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று
நலம் விசாரித்து வருகின்றனர்.
அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, மீன்வளத்துறை
அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து
கருணாநிதியின் நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. தம்பிதுரை, அதிமுக சார்பாகவும்,
அம்மாவின் வழி நடக்கும் சின்னம்மாவின் சார்பாகவும் உடல் நலக்குறைவால்
சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து நலம்
விசாரித்தோம் என்றார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து
அறிந்தோம். அவரது மனைவி, மகள் கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்தோம். கருணாநிதி
நலம்பெற அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். கருணாநிதி மிக விரைவில்
குணம் அடைவார் என்ற தகவலால் மகிழ்ச்சி அடைந்தோம். எங்களை வழி நடத்தும்
சின்னம்மா சார்பாகவும் வாழ்த்து தெரிவித்தோம் என்றும் தம்பிதுரை கூறினார்.
அதிமுகவினர் பொதுவாக கருணாநிதி என்றே பெயர் சொல்லி அழைப்பார்கள். தற்போது
'கலைஞர்' என உச்சரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment