நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு
பாமகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்
கூறியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏப்ரல் 1&ஆம்
தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும்
மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு நாடு
போற்றும் நல்ல நடவடிக்கையாகும்.
சமுதாயத்தின் அனைத்து சீரழிவுகளுக்கும் முதன்மைக் காரணம் மது தான்
என்பதால் அதை அடியோடு ஒழிப்பதற்காக மக்கள் போராட்டங்களையும், சட்டப்
போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வருகிறது. மக்கள்
போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை
ஏற்படுத்தப்போவதாக அரசு அறிவித்து, முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை
மூடியுள்ளது. சட்டப்போராட்டத்தின் ஓர் அங்கமாக என்னால் தோற்றுவிக்கப்பட்ட
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி அதன்
தலைவர் க.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்
உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2013&ஆம் ஆண்டில்
ஆணையிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த
உச்சநீதிமன்றம், முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை
மட்டும் மூட ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த
504 மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகத் தான் நாடு முழுவதும் மாநில மற்றும் தேசிய
நெடுஞ்சாலைகளில் திறக்கப் பட்டுள்ள மதுக்கடைகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள்
அகற்ற வேண்டும் என்றும், அதற்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க
அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்
தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய நெடுஞ்சாலை
அமைச்சகத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, பகுதிகளைப் பொருத்து,
நெடுஞ்சாலைகளில் இருந்து 50 மீட்டர் முதல் 100 மீட்டருக்கு அப்பால்
மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சாதாரண
பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருந்து 220 மீட்டர் சுற்றளவுக்குள்
மதுக்கடைகள் அமைக்கப்படாது என்றும், நகர்ப்புறங்களில் மது விற்பனை என்பது
அரசின் வருவாய் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதற்கு விலக்களிக்கப்பட
வேண்டும் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி
வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், நகர்ப்புறம், கிராமப்புறம்
வித்தியாசமின்றி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர்
தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து
கண்ணுக்கெட்டும் தொலைவில் மதுக்கடைகளே இருக்கக்கூடாது என்று தங்கள்
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் இருந்து
மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் நீதிபதிகள் எவ்வளவு உறுதியாக
இருந்திருக்கின்றனர் என்பதை இத்தீர்ப்பு காட்டுகிறது.
தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த நிலையில், நாடு முழுவதும் இதை
நடைமுறைப் படுத்துவது குறித்து விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம்
அறிவித்திருந்த நிலையில், நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை எப்படியாவது
காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிஞர்களை
மது ஆலை அதிபர்கள் அமர்த்தி உச்சநீதிமன்றத்தில் அணிவகுக்கச் செய்தனர்.
மத்திய அரசும் மது ஆலை மற்றும் மதுக்கடை அதிபர்களுக்கு சாதகமாகவே
செயல்பட்டது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ மக்கள் நலனையும், உண்மையையும்
மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்
நடத்தியது. இறுதியில் உண்மையும், நீதியும் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில்
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.
இவர்களில் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
ஆவர். பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி சாலை விபத்துக்களில் 25
முதல் 30 விழுக்காடு விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால்
ஏற்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இளம் விதவைகளின் எண்ணிக்கை
அதிகமாக உள்ளது.
இதற்குக் காரணம் மது தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பின் மூலம் குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறையும் என்பதே
மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்
இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது. மாறாக
இத்தீர்ப்பை மார்ச் மாதத்திற்கு முன்பே செயல்படுத்த முன்வர வேண்டும்.
மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் இத்துடன் ஓயாது.
தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரின் உயிரையும், தமிழகத்தில் ஆண்டு 2
லட்சம் பேரின் உயிரையும் பறிக்கும் மதுவை முழுமையாக ஒழித்து மதுவில்லா
தமிழகம் அமைப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இந்த
இலட்சியத்தை எட்டி, மக்களைக் காப்பதற்காக பா.ம.க. தொடர்ந்து பாடுபடும்
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment