Latest News

அப்பல்லோவிற்கு திருப்பதி லட்டும் ஐடி துறைக்கு அல்வாவும் கொடுத்த சேகர் ரெட்டி.. சிக்கியது எப்படி?

 
ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, திருப்பதிக்கு சென்று பூஜை செய்து, ஒரு கூடை திருப்பதி லட்டுடன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து லட்டு பிரசாதத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுடன் நெருக்கமாக இருந்த அவர் வருமானவரித் துறையினரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் காண்டிராக்ட் பணிகளை சேகர் ரெட்டி செய்து வருகிறார். அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது கணக்கில் காட்டாத ரூ.170 கோடி ரொக்கம், 167 கிலோ தங்கம் பிடிபட்டது. அத்துடன் ரூ.100 கோடிக்கு புதிய ரூ.2,000 நோட்டுகளும் சிக்கியது.

காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. ரயில்வே காண்டிராக்டராக வாழ்க்கையை தொடங்கிய அவர், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்துள்ளார். இதற்கு தோதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் அவருக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

கோடீஸ்வரரான சேகர் ரெட்டி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. முதலில் இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்தார். பிறகு சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 3வது தளத்தில் ஜெ.எஸ்.ஆர். இன்ப்ரா டெக், எனும் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி நடத்தினார்.

மணல் குவாரி ஓனர் இதில் நல்ல வரும் வருவே, காட்பாடி காந்திநகர் கிழக்கு 10வது குறுக்குத் தெருவில் மிகப் பெரிய பங்களா கட்டிக் கொண்டு அங்கு சேகர் ரெட்டி குடியேறினார். இந்த நிலையில் எஸ்.ஆர்.எஸ்.மைனிங் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கினார்.

கட்டி கட்டியாய் தங்கங்கள் தொடர்ந்து ரியல் எஸ்டேட், கட்டு மானம், மணல் குவாரி, நீர் மேலாண்மை, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் என தமிழ் நாடு அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் சேகர் ரெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அளவிற்கு அதிகமாக பணம் சேர்ந்ததையடுத்து, கிலோ கணக்கில் கட்டித் தங்கத்தை வாங்கி பதுக்கத் தொடங்கினார்.

கட்டுக்கட்டாய் புதிய ரூ.2000 நோட்டுக்கள் இப்படி அவர் வாங்கிய நகை மற்றும் பணத்தை சென்னை மற்றும் காட்பாடியில் உள்ள வீடுகளில் சேகர் ரெட்டி வைத்தார். இந்நிலையில்தான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. சேகர் ரெட்டிக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வங்கி மேலாளர்கள் மற்றும் பைனான்சியர்கள் மூலம் சுமார் ரூ.40 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார் சேகர் ரெட்டி. இதுபற்றி யாரோ ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.


களத்தில் இறங்கிய வருமானவரித்துறை இதனையடுத்து கடந்த 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 100 பேர் சேகர் ரெட்டியின் சென்னை, காட்பாடி வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும், சேகர் ரெட்டியின் உறவினரான சீனுவாசலு ரெட்டி, நண்பர்களான பிரேம் ரெட்டி மற்றும் ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ஏகப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் சிக்கியுள்ளன.


167 கிலோ தங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையில் 50 கிலோ தங்க நகைகள் சிக்கியது. காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 100 கிலோவுக்கும் மேல் நகைகள் கிடைத்தது. நகைகளை பொறுத்தவரை சேகர்ரெட்டியின் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும் சுமார் 167 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காரில் சிக்கிய 24 கோடி வேலூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றபோது சேகர்ரெட்டியின் காரில் ரூ.24 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இல்லாமல் ஒரு கார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளது. அதில் இன்னும் பல கோடி ரூபாய் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 


மனைவியிடம் விசாரணை காட்பாடியில் ‘சீல்' வைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் மற்றொரு வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வேலூர் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை இயக்குனர் முருகபூபதி தலைமையில் 5 கார்களில் 12 அதிகாரிகள் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்தனர். அவர்களுடன் பணம், நகைகளை மதிப்பீடு செய்வதற்காக 2 வங்கி அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். சேகர்ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயை அதிகாரிகள் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வரவழைத்திருந்தனர். ஜெயஸ்ரீ முன்னிலையில் ஒவ்வொரு ‘சீல்' உடைக்கப்பட்டு பணம், நகைகள் எடுக்கப்பட்டன.

ரகசிய ஆவணங்கள் சிக்கின சனிக்கிழமை மாலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தம் 14 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடி வீட்டில் துருவி, துருவி சோதனையிட்டு நகை, பணம், பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.


6 மூட்டையில் பணம் சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கட்டப்பட்டு 6 டிராவல் ‘பேக்'கு களில் அடைக்கப்பட்டன. இதில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தன.


ரகசிய அறைகளில் பணம், நகை வருமான வரி சோதனையின் போது, சேகர் ரெட்டி வீட்டு சுவரில் பல ரகசிய அறைகள் இருப்பதும் தெரிந்தது. இந்த லாக்கர்களை சோதனை செய்த போது, ஏராளமான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அந்த நகைகள் அனைத்தையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கிட்டனர். பிறகு அவை 2 சூட்கேஸ்களில் அடுக்கப்பட்டன. நிறைய சொத்து ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த சொத்து ஆவணங்கள் மட்டும் 3 பெரிய டிராவல் பேக்குகளில் அடைக்கப்பட்டது.


அலுவலங்களில் தொடர்ந்து சோதனை சேகர் ரெட்டியின் மற்ற அலுவலகங்களில் தொடங்கிய சோதனை இன்னும் முடியவில்லை. மணல் குவாரிகள் தொடர்பான கணக்குகளை சரிபார்க்க இன்னும் சில தினங்கள் தேவைப்படும். எனவே, சேகர் ரெட்டியிடம் இருந்து மேலும் பணம், நகைகள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.