மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு
உத்தரவிட்டால் அதிமுக அரசு மூடி மறைத்துள்ள அனைத்து முறைகேடுகளும்
வெளிச்சத்திற்கு வரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுலிவாக்கம் அடுக்குமாடிக்
கட்டிடத்தை இடிக்கவும் முதலில் முட்டுக்கட்டை போட்டது அதிமுக அரசு. நான்
தொடர்ந்த வழக்கின் மூலமாகத்தான் இதற்கான சட்டப் போராட்டம் நடந்தது.
உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உடனடியாக கட்டிடத்தை இடிக்க
கோரியும், அதற்கு இரண்டு முறை கால அவகாசம் கேட்ட அதிமுக அரசிற்கு உயர்
நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின்
கண்டனத்துக்குப் பிறகு, ''இன்னும் 20 நாட்களில் அந்த கட்டிடத்தை இடித்து
விடுகிறோம்'' என்று கடந்த 13.8.2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்
முன்பு ஒப்புக் கொண்டது அதிமுக அரசு.
அதன்படி இன்றைக்கு அந்த
அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இடிந்து
விழுந்த 11 மாடிக் கட்டிடம், இப்போது இடித்த அடுக்கு மாடிக் கட்டிடம்
எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அரசு வழங்க
முன்வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
ஆகவே எனது பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவுகளின் வாயிலாக இன்றைக்கு அடுக்குமாடிக் கட்டிடத்தை இடித்திருக்கும்
அதிமுக அரசு கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டாலும், மக்களின்
பாதுகாப்புக் கருதி இந்தக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு
வரவேற்கத்தக்கது.
அதே போல் இந்த கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ.
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இதில் அதிமுக அரசு மூடி மறைத்துள்ள அனைத்து
முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த கட்டிடங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு
மக்களுக்கும் அதிமுக அரசு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்'' என்று
ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment