சென்னை மௌலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இன்று
வெடிபொருட்கள் துணையுடன் தகர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கட்டிடத்தோடு
சேர்ந்து பலரின் சொந்த வீடு கனவும் தூள் தூளாகியுள்ளது என்பது மிகவும்
வருத்தத்திற்குரிய விஷயம்.
சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில்
புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் ஒன்று, கடந்த 2014ம் ஆண்டு
ஜுன் மாதம் பெய்த கனமழையில் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இதில்,
அதன் தரைதளத்தில் தங்கியிருந்த 61 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாட்டையே
பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து அதன் அருகில்
கட்டப்பட்டு வந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தையும் இடித்துத் தள்ள
நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆபத்தான நிலையில் உள்ள அந்த 11 மாடிக் கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது.
3 நொடிகளில்
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கட்டடத்துக்குள் வெடிபொருட்களை
நிரப்பி வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. 3 நொடிகளில் 11 மாடிக் கட்டிடமும்
இடிந்து தரைமட்டமானது. சென்னையில் தற்போது பரபரப்பான செய்தியாக இருப்பது
இந்த கட்டட இடிப்புதான்.
கண்ணீரும், கனவும்...
ஆனால், இந்தக் கட்டிட இடிப்புக்கு பின்னணியில் பல குடும்பங்களின்
கண்ணீரும், கனவும் இருப்பதை மறுக்க இயலாது. ஏனெனில், ஒரு வீடு என்பது
வெறும் செங்கல், மணலால் சேர்த்துக் கட்டப்படும் கட்டிடம் மட்டும் அல்ல, அது
கனவுகளால், கற்பனைகளால் உருவாக்கப்படுவதும் ஆகும்.
சொந்த வீடு...
இடிந்து விழுந்த மற்றும் தற்போது இடிக்கப்பட்டுள்ள கட்டிடம் என
மௌலிவாக்கத்தில் இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பில் 76 குடும்பங்கள் வீடு
வாங்கியிருந்தன. சத்தமேயில்லாமல் தற்போது இந்த 76 குடும்பங்களின் சொந்த
வீடு கனவும் தான் தகர்க்கப் பட்டுள்ளது.
மன உளைச்சல்...
பலரும் தங்களது சேமிப்புத் தொகை மற்றும் தங்க நகைகளை விற்று, வங்கிகளில்
கடன் வாங்கி சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இந்த
குடியிருப்பில் வீடு வாங்கி இருந்தனர். ஆனால், தற்போது பணம், நகையை
இழந்ததோடு, மாதந்தோறும் வீட்டுக்கடனும் தங்கள் வருவாயில் இருந்து செல்லும்
நிலையில் வீடு மட்டும் இல்லை என்று நினைக்கும் போது இங்கு வீடு வாங்கிய
பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment