தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை அரசியலாக்க தி.மு.க.
விரும்பவில்லை என்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ந் தேதி
முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து
வருகிறது. அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட
அறிக்கையில், முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நீண்ட நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என
அறிவுறித்தினர். இதனால் முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகளும் ரெக்கை
கட்டி பறந்தன.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர்
தி.மு.க.வில் இணையும் விழா அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது
அவர் பேசியதாவது: முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்
இருப்பதை அரசியலாக்கி நான் பேசுவதாக யாரும் கருதி விடக்கூடாது, இன்றைக்கு
உள்ள சூழலை நான் சொல்லவில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
சேர்வதற்கு முன்னால் இருந்த நிலையை சொல்கிறேன், அன்றைய நிலையை நீங்கள்
எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே 5 வருடம் அவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தார்கள்.
அப்படி ஆட்சியில் இருந்தபோது இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை எதையாவது
செய்திருக்கிறார்களா? தமிழகத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? அவர்கள்
வெற்றி பெற்று இருக்கலாம். வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம். திராவிட
முன்னேற்ற கழகம் எத்தனையோ தேர்தல்களில் ஈடுபட்டிருக்கிறது. பல வெற்றிகளை
பெற்று இருக்கின்றோம். அதேபோல பல தோல்விகளையும் கண்டு இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்று தான் நான்
சொல்கிறேனே தவிர, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதென்று சொல்லவில்லை என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. முன்னின்று உள்ளாட்சித் தேர்தலை
நிறுத்தி விட்டதென்று, ஒரு தவறான பிரசாரத்தை இன்னமும் தொடர்ந்து செய்து
கொண்டு இருக்கின்றார்கள்.
அதன் காரணம் என்னவென்று எனக்கே இன்னும் புரியவில்லை. தேர்தல் குறித்து
வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி இதே மேடையில் அமர்ந்து இருக்கிறார். என்ன
வழக்கு தொடர்ந்தார் என்றால், தேர்தலை நிறுத்த வேண்டுமென்று வழக்கு
போடவில்லை, தேர்தல் முறையாக நடைபெற வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின்
தேர்தல் அதிகாரத்தில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறக்கூடாது,
தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் தேர்தலை
நடத்திட வேண்டும், அதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த
வேண்டும், வாக்குப்பதிவின் போது அங்கு பணியாற்றக் கூடிய அதிகாரிகள்,
அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும், இந்த மாநிலத்தின் அரசு அதிகாரிகளாக
இல்லாமல், வெளி மாநில அதிகாரிகளை கொண்டு தேர்தலை நடத்திட வேண்டும்.
அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற இடத்தில் எந்தவித அசம்பாவிதமும்
நடக்கக் கூடாது, எனவே ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வெப் கேமரா அமைக்க
வேண்டும், அப்படி வைத்தால் தேர்தல் முறையாக நடக்கும், தேர்தல் முடிந்து
வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாம்
வழக்கு தொடர்ந்தோம். அதுமட்டுமல்ல, அந்த வழக்கில் மேல் முறையீட்டுக்காக
உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று இருக்கின்றோம். வரும் 18-ம் தேதி அதன்
விசாரணை நடக்கவிருக்கிறது என்பது ஒரு பக்கம்.
ஆக, முன்கூட்டியே திட்டமிட்டு தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியான அதிமுகவும்
கூட்டணி அமைத்துக் கொண்டு, எந்தெந்த இடங்களில் இட ஒதுக்கீடு என்ற பட்டியலை
முதலிலேயே அவர்களுக்கு மட்டும் கொடுத்து, இதுபோன்ற சதிகள் எல்லாம்
நடந்ததால் தான் முன் கூட்டியே நமது ஆர்.எஸ்.பாரதி மூலமாக தி.மு.க. சார்பில்
வழக்கு தொடரப்பட்டது.
இவையெல்லாம் உண்மை என்பதை நீதிமன்றம் உணர்ந்த காரணத்தால் தான், இந்த
தேர்தல் முறையாக அறிவிக்கப்படவில்லை, எனவே தேர்தலை முறையாக நடத்த வேண்டும்,
ஆகவே, தேர்தலை டிசம்பர் மாதம் வரையில் ஒத்தி வைக்கிறோம், அதற்கு முன்பாக
இந்த பணிகளை எல்லாம் சரியாக செய்யுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு
இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம் என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தல்
என்பது மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய உள்ளாட்சி
அமைப்புகளுக்கு நடைபெறுவது. இன்றைக்கு 89 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
இருந்தாலும், நாங்கள் மக்களுக்கு செய்ய எண்ணுவதை எல்லாம் நிறைவேற்ற
வேண்டுமென்றால், ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளில் கழகத்தினர் இருந்தால்
தான் அந்த பணிகளை நிறைவேற்ற முடியும்.
குடிநீர் பிரச்சனை, சாலை வசதிகள், கழிவுநீர் பிரச்சனைகள் போன்ற
பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகள், அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க
வேண்டுமென்று சொன்னால், உள்ளாட்சி அமைப்புகளில் கழகத்தின் பிரதிநிதிகள்
இருந்தால், அவர்கள் மூலமாக அந்த பணிகளை நாம் உடனுக்குடன் நிறைவேற்ற
முடியும்.
அந்த நிலையை எதிர் நோக்கி நாம் காத்திருக்கிறோம். எனவே நமது
இயக்கத்தில் இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கக்கூடிய உங்களை எல்லாம் நான்
அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, மகிழ்ச்சியோடு வந்திருக்கும் உங்களை
எல்லாம் நாங்கள் பெருமையுடன் வரவேற்கிறோம். தலைவர் கலைஞரின் சார்பில்
வரவேற்கின்றோம்.
ஆனால் என்னதான் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வந்திருந்தாலும்,
கொள்கைகளோடு நாங்கள் வரவேற்று இருந்தாலும், இந்த கொள்கைகளுக்கு,
மகிழ்ச்சிக்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல உள்ளாட்சித் தேர்தலில் ஒரு
மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றிட நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று
அன்போடு கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment