முதுமையையோ ,உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு
போதும் சமரசம் செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன் திமுக தலைவர் கருணாநிதி.
வயதானாலும் உங்க எழுத்துல கொஞ்சம் கூட கம்பீரம் குறையலையே என்று அவரை
அரசியல்ரீதியாக பிடிக்காதவர்கள் கூட கூறுவார்கள்.
'சன்'னுக்கு ஏது சன்டே என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் இவரைப் பற்றி
பெருமையாக கூறுவார். அந்த ஓய்வறியா சூரியன் கருணாநிதியே இப்போது
ஒவ்வாமையால் ஓய்வில் இருக்கிறார். கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர்
உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை
(அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்
கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் கலைஞரை காண வருவதைத் தவிர்த்து,
ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று என்று திமுக அலுவலகம் அறிக்கை
வெளியிட்டுள்ளது.
சுறுசுறுப்பான தலைவர்
அதிகாலை நடைபயணம்,யோகா,உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது, தன்னை பற்றிய
விமர்சனங்களுக்கு பதில் எழுதுவது, கேள்வி, பதில் அறிக்கை, கட்சி மற்றும்
சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக
வைத்திருப்பதே திமுக தலைவர் கருணாநிதியின் அடையாளம்.
முதுமையால் தளர்வு
நடையில் இருந்து சக்கர நாற்காலிக்கு மாறிய பின்னரும் கூட கட்சி
நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள், உடன்பிறப்புகளின் இல்ல திருமண
நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பார் கருணாநிதி. 92 வயது முதுமையால் கடந்த
சில வாரங்களாவே அவரை சோர்வு வாட்டி வரவே ஓய்வு எடுக்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர்
கருணாநிதி ஒருநாள் முகம் காட்டாவிட்டாலும் அது தலைப்பு செய்தி ஆகிவிடும்.
தனது நாவன்மையையும், எழுத்துவன்மையும் தமிழகத்தில் ஆயுதம் ஆக்கி களம்
கண்டவர் அண்ணா. அந்த அண்ணாவின் பாசறையில் பயின்ற கருணாநிதி அதற்கு சற்றும்
சளைக்காதவர். அறுபது ஆண்டு கால அரசியல் வாழ்வில் 14 சட்டசபைகளைக் கண்ட
மூத்த உறுப்பினர். தேர்தல் பிரச்சாரம் என்றால் இன்றைக்கும் சுறுசுறுப்பாக
கிளம்புவார்.
தன்னிகரற்ற தலைவர்
இன்றைய தமிழக அரசியல் விவாதங்கள் அனைத்திலும் பேசப்படுபவராய் இருப்பவர்
கருணாநிதி. ஊடகத்தில் தினம் தினம் பேச படுபவராக இருப்பதும், பேச்சின் படுப்
பொருளாக இருப்பது என தினம் தினம் செய்திகளை அளிக்கும் ஆளுமையாக
இருக்கிறார் கருணாநிதி. ஆளுங்கட்சியாக இருந்த போது தலைமைச் செயலகம்
வருவதிலாகட்டும், எதிர்கட்சியாக இருக்கும் போது தினம் தினம் அறிக்கைகள்
தருவதிலாகட்டும் அவருக்கு நிகர் அவர்தான்.
உடன்பிறப்பே!
கலைஞர் தன உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் எழுதும் கடிதங்கள் எல்லாம்
இலக்கியங்கள். இன்றைய தலைமுறையினர் தலைவர் கருணாநிதியிடம் இருந்து
உழைப்பையும், நாவன்மையையும், தனித்தன்மையையும், செயல் ஆக்கும் தன்மையும்,
எப்போதும் உறவுகளின் தொடர்பில் இருப்பதும் ஆன பண்புகளை பெற வேண்டும்.
அப்போதுதான் அரசியலில் வெற்றியை பெற முடியும். இத்தகைய பெருமை மிகுந்த
தலைவர் ஓய்வறியா சூரியனையே ஒவ்வாமை ஓய்வு எடுக்க வைத்து விட்டது என்பதுதான்
திமுக தொண்டர்களின் இப்போதய கவலை.
No comments:
Post a Comment