தமிழகத்தில் வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம்
ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியலை
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 16ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையொட்டி அரவக்குறிச்சி
மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. அதனைத்
தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட
சீனிவேல் திடீரென மரணம் அடைந்ததால் அந்த இடமும் காலியாக இருந்தது.
இதனையடுத்து, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளில் நடத்தப்படாமல்
ரத்து செய்யப்பட்ட தேர்தலை நடத்தவும் திருப்பரங்குன்றம் தொகுதியில்
இடைத்தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து, வரும் 19 ம் தேதி
தேர்தல் நடத்த அறிவித்தது. இதனையடுத்து அந்த 3 தொகுதிகளில் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், இந்த 3 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்
இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, அரவக்குறிச்சியில் ஆண் வாக்காளர்கள் 97
ஆயிரத்து 100 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 247
பேரும் உள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 146
பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 352 பேரும், மாற்று
பாலினத்தவர் 18 பேரும் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து
239 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 629 பேரும் மாற்று
பாலினத்தவர் 22 பேரும் உள்ளனர்.
No comments:
Post a Comment