உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை
திறந்துவிடாததால் என்ன நடவடிக்கை பாயுமோ என கதிகலங்கிப் போயுள்ளது
கர்நாடகா.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த
உச்ச நீதி மன்றம் தமிழகத்துக்கு 21-ந்தேதி முதல் 27-ம் தேதி வரை 6,000 கன
அடி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என கடந்த 20-ந் தேதி
உத்தரவிட்டது.
ஆனால் இதன்படி காவிரி நீர் திறக்கப்படவில்லை. மேலும் கடந்த 23-ந் தேதி
சட்டசபையை அவசரமாக கூட்டிய கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு
எதிராக சிறப்பு தீர் மானம் நிறைவேற்றியது.
இதுதான் தீர்மானம்
அதில், காவிரி நீர் கர்நாடகாவின் குடி நீருக்கு மட்டுமே. தமிழகத்தின்
பாசனத்துக்கு திறந்துவிட இயலாது என கூறப்பட்டது. இதற்கு மாநில ஆளுநர்
வாஜுபாய் வாலா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய நீர் வளத்துறை,
சட்டத்துறை மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிக்கலை ஏற்படுத்திய சித்தராமையா
இந்த விவகாரம் நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர்
சித்தராமையா அரசியல் சாசன சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும்,
நீதித்துறைக்கும் அரசியலமைப் புக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும்
குற்றம்சாட்டப்படுகிறது.
புதிய மனு
இந்த நிலையில் இன்று கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத்
தாக்கல் செய்துள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லை; ஆகையால் டிசம்பர் மாதம்
தரும் நீரோடு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறோம் என
கூறியிருக்கிறது. ஆனால் தமிழகமோ, உத்தரவை மதித்து காவிரி நீரை திறக்கும்வரை
கர்நாடக அரசின் மனு மீது விசாரணை நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
நாளை 'சூடு'
உச்சநீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது
கர்நாடகாவை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டிக்கக் கூடும் என்று
தெரிகிறது.
No comments:
Post a Comment