Latest News

மீண்டும் ஒரு கலவரத்தையோ, வன்முறையையோ கோவை தாங்காது - டாக்டர் ராமதாஸ்


கோவையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சசிக்குமார் கொலையும் தவறு, கோவையில் நடந்த வன்முறையும் தவறு என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், சசிக்குமாரைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும். அதேபோல வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கொலையாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், கோவையின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக 
டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

சசிக்குமார் கொலை கண்டனத்துக்குரியது கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் நேற்று முன்நாள் இரவு கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நகரில் வன்முறை வெடித்திருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. சசிக்குமாரின் கொலை, அதைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை ஆகிய இரண்டுமே கண்டிக்கத்தக்கவை ஆகும்.

யாராக இருந்தாலும் கைது செய்க இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமாரின் படுகொலை மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்க கொடிய நிகழ்வு ஆகும். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதும் தான் தீர்வு ஆகும். இந்தக் கடமையை செய்ய காவல்துறையினருக்கு அனைத்துத் தரப்பினரும் துணை நிற்க வேண்டும்.

பதில் வன்முறை மிகத் தவறு அதற்கு மாறாக வன்முறையில் ஈடுபடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வன்முறைக்கு வன்முறை என அனைவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். சசிக்குமாரின் கொலைக்காக தண்டிக்கப்பட வேண்டியது கொலையாளிகள் தானே தவிர, அப்பாவி மக்களும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அமைதியை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

போலீஸ் அலட்சியமே காரணம் கோவையில் வன்முறை வெடித்ததற்கு காவல்துறையினரின் அலட்சியம் தான் முக்கியக் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆம் தேதி வேலூரில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஓசூரிலும், திண்டுக்கல்லிலும் இந்து முன்னணி நிர்வாகிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் இந்த நிகழ்வுகளுக்கு பிறகு இந்து முன்னணியினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய காவல்துறை தவறி விட்டது. சசிக்குமாரின் கொலையைத் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்த நிலையில், அதனால் வன்முறைகள் ஏற்படலாம் என்பதை காவல்துறையினர் யூகித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டிருக்க வேண்டும்.

வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? அவ்வாறு செய்யாததன் விளைவு தான் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்து அமைதி சீர்குலைந்தது.அதைவிட கொடுமை என்னவெனில், பட்டப்பகலில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆகும். சில இடங்களில் காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அதற்கு காரணமானவர்கள் மீது கூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை.

வன்முறை வெடிக்காமல் பார்க்க வேண்டும் குறைந்தபட்சம் மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யாததன் மூலம் கோவை மாநகர காவல்துறை அதன் அடிப்படைக் கடமைகளில் இருந்து தவறி விட்டது என்று தான் கூற வேண்டும். நேற்றிரவு முதல் நிலைமை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதை தக்கவைத்துக் கொள்ளவும், இனி வன்முறை வெடிக்காமல் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை தாங்காது 1998ஆம் ஆண்டு வரை கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும், தொழில் நகரம் என்றும் தான் உலகம் அறிந்திருந்தது. தொடர்குண்டுவெடிப்பு மற்றும் அதற்கு முன் நடந்த கலவரங்களால் கோவை குறித்த உலகத்தின் பார்வை மாறியது. இழந்த பெருமைகளை கோவை மீட்டெடுத்து வரும் வேளையில், இன்னொரு வன்முறையையோ, கலவரத்தையோ கோவை மாநகரம் தாங்காது. தமிழகத்தின் தொழில் உற்பத்தியில் 25% கோவை பகுதியில் தான் நடைபெறுகிறது. தமிழகத்தில் வறுமையில் வாடும் மக்கள், நம்பிக்கையுடன் வேலை தேடி செல்லும் பகுதிகளாக திகழ்வது கோவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தான். அதற்கு எந்த வகையிலும் ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

சதிக்கு யாரும் துணை போய் விடாதீர்கள் 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதரிகள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர்களுக்காக முதன்முதலில் போராட்டம் நடத்தியவன் நான். அதேபோல், 2013 ஆம் ஆண்டு சென்னை, வேலூர், சேலம் போன்ற இடங்களில் இந்துத்வா தலைவர்கள் கொலை செய்யப்பட்ட போது முதன்முதலில் அதைக் கண்டித்ததும் நான் தான். அந்த உரிமையில் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தின் சின்னமாக திகழும் கோவை நகரத்தை வன்முறை நரகமாக மாற்றும் சதிக்கு எவரும் துணை போகக்கூடாது; அதேநேரத்தில் கோவையை வளர்ச்சிக்கான நகரமாக உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பது தான். காவல்துறையினரும் தங்கள் கடமையை உணர்ந்து, சசிக்குமார் படுகொலைக்கும், வன்முறைகளுக்கும் காரணமானவர்களை கைது செய்வதுடன், கோவையை அமைதி நகரமாக பராமரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.