இந்தியாவில் தங்கி நடித்து வரும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் அடுத்த
48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர
நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கேரவின் மனைவி ஷாலினி தாக்கரே
எச்சரித்துள்ளதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களது படப்பிடிப்புகள் தடுக்கப்படும் என்றும் அவர்கள் இங்கு தொடர்ந்து
தங்கியிருக்கக் கூடாது என்றும் ஷாலினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் பாகிஸ்தான் நடிகர் நடிகையருக்கு போதுமான பாதுகாப்பு
அளிக்கப்படும் என்று மும்பை போலீஸார் உறுதியளித்துள்ளனர்.
தற்போது மும்பையில பாகிஸ்தான் நடிகை மஹிரா கான், நடிகர் பவத் கான்
உள்ளிட்டோர் தங்கி நடித்து வருகின்றனர். இவர்களுக்குத்தான் ஷாலினி தாக்கரே
எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்
பேசுகையில், நமது நாட்டிலேயே நல்ல நடிகர்கள், நடிகைகள் உள்ளனர். எனவே
இவர்கள் நமக்குத் தேவையில்லை.
பாகிஸ்தான் நமது நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு வருகிறது. தீவிரவாத செயல்களில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகிறது. இதை பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு கடிதம் மூலம்
தெரிவித்துள்ளோம்.
மேலும் எந்த அடிப்படையில் பாகிஸ்தானிலிருந்து நடிகர், நடிகைகளை இங்கு
அழைத்து வருகிறீர்கள் என்று கேட்டு தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதப்
போகிறோம்.
எங்களது உத்தரவுப்படி பாகிஸ்தான் நடிகர், நடிகையர் நாட்டை விட்டு
வெளியேறாவிட்டால் எங்களது தொண்டர்கள் அவர்களை நாட்டை விட்டு விரட்டுவர்
என்றார் ஷாலினி.
மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் பொதுச் செயலாளராக இருக்கிறார் ஷாலினி
தாக்கரே.
No comments:
Post a Comment