காஷ்மீரில் இரவு நேரங்களில் சோதனை நடத்துவதாகக் குற்றம்சாட்டி
ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதில் மோதல் ஏற்பட்டு 12 பாதுகாப்பு
படையினர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஜூலை
மாதம் 9ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த 2
மாதங்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை பாதுகாப்பு
படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஒன்று
ஏற்பட்டது. தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் கரீம்பாத் கிராமத்தில்
பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில்
பாதுகாப்பு படையினர் சோதனைகள் மேற்கொள்வதை கண்டித்து இந்த போராட்டம்
நடத்தப்பட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்
இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர்
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு
போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல்
நடத்தியுள்ளனர். அதில் 12 பாதுகாப்பு படையினர் உட்பட 20க்கும் மேற்பட்டோர்
படுகாயம் அடைந்துள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஸ்ரீநகரில் மூன்று போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில்
ஊரடங்கு உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிற பகுதிகளில் மக்கள்
கூட்டமாக கூடுவதற்கு தடை அமலில் உள்ளது.


No comments:
Post a Comment