உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நீக்கமற நிறைந்தே காணப்படுகிறது. இதன் சமீபத்திய ஆதாரம், தன்னையும் தீக்கிரையாக்கி, காதலிக்க மறுத்த இளம்பெண்ணையும் தீக்கு பலியாக்கிய மாற்றுத்திறனாளி இளைஞர் செந்திலின் கொடுஞ்செயல். பெண்ணை தனக்கான பண்டமாக சிந்திக்கும் பழம் சிந்தனையின் மிச்சசொச்சங்கள் மனித மனங்களில் இருந்து நீங்காததையே இது வெளிப்படுத்துகிறது.
ஆனால், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பாலினத்தை கடந்து சாதிய ரீதியிலான வேறொரு நீதியையும் வேண்டி நிற்கின்றன. இந்தவகையில் சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், சமீபத்தில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை வெளியுலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், ராஜா, குமார் என்ற இரு ஆதிக்கசாதியினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை பதிவு செய்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள எவிடென்ஸ் கதிர், தமிழகத்தில் 2006-ல் 515 தலித் பெண்களும், 2007-ல் 604 பெண்களும், 2008-ல் 624 பெண்களும் கொலை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2009-ல் 587-ஆக இருந்த தலித் பெண்களின் கொலை எண்ணிக்கை மீண்டும் 2010-ல் 629, 2011-ல் 625-ஆக உயர்ந்ததையும் எடுத்துக்காட்டியுள்ளார். உயிரிழந்த பெண்களில் 60 விழுக்காட்டினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை எப்போதும் நிகழும் ஒன்றாகவே உள்ளது. இங்கு சமத்துவம் என்பது போதிக்கப்படும் ஒன்றாகவே திகழ்கிறது. ஆனால், அது எப்போதும் நடைமுறைக்கு வருவதில்லை. தலித் பெண்கள் இவ்வகையில் மேலும் அதிகளவு வன்முறையை எதிர்கொள்கின்றனர். அவர்களை சமமானவர்களாக சமூகம் கருதாதவரை இது நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கும்.”
ஆந்திர மாநிலம் மேற்கு கோதவரி மாவட்டத்தை சேர்ந்த காவேரி என்ற பெண்ணின் வலிமிகுந்த வரிகள் இவை. 1999-ல் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதால் ஆதிக்க சாதி ஆண்களால் தாக்கப்பட்டதுடன், அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பாரதியின் வரிகளை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளது “Dalit Women Speak Out: Caste, Class and Gender Violence in India” நூல். ஆந்திரா, பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் உத்தரபிரதேசத்தில் சாதிய ரீதியில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளுக்கு எதிரான ஆதாரப்பூர்வ தொகுப்பு இது.
32 வயதான சாய் அம்மாவின் அனுபவம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதில்லை. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தலித் பெண் என்ற காரணத்தினால் ஆதிக்க சாதியினரால் பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்பட்டது. சாய் அம்மா அமர தனியே இருக்கை அமைக்கப்பட்டதுடன், தாங்கள் சொல்லும் படிவங்களில் கையெழுத்திடவும், 3 மாதங்களுக்குள் பதவி விலகவும் அவர் அச்சுறுத்தப்பட்டார். விளைவு, ஆதிக்க சாதியை சேர்ந்த துணைத்தலைவர், தலைவர் பதவியை அடையும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆணாதிக்க சமூகத்தில் பேதமின்றி அனைத்து பெண்களுக்கும் எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் நிலையில், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ”சாதி-வர்க்கம்-பாலினம்” என்ற முக்கண்ணாடி கொண்டே அணுகவேண்டும் என சமூகவியல் செயல்பாட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
4 மாநிலங்களை சேர்ந்த 500 தலித் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 46.8 விழுக்காடு பெண்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களையும், 23.2 விழுக்காடு பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளாகியுள்ளதையும் “Dalit Women Speak Out: Caste, Class and Gender Violence in India” நூல் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இந்தியாவில் 80 மில்லியன் தலித் பெண்கள் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளை சந்தித்து வருவதை சர்வதேச அறிக்கையொன்று சுட்டிக்காட்டுகிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் Article 15 (1) பிரிவு, பாலியல் ரீதியிலான பாகுபாடுகளை ஏற்கவில்லை. Article 21 அனைவரும் உயிர் வாழ்வதற்கான உறுதிமொழியை அளித்துள்ளது. குறிப்பாக Article 46 அனைத்து வகை சுரண்டலிலும் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களை பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. சட்டரீதியில் இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்த போதிலும், பெண்கள் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
”பெண்கள் கட்டாயம் ஒன்றிணைவார்கள் என்று நான் நம்புகிறேன். அது, சமூக அநீதிகளை களையும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றும்”
-டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (1942-ல் தலித் பெண்கள் கூட்டமைப்பில் ஆற்றிய உரை)
அனைத்து வகை சமூக அநீதிகளுக்கும் எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி கூறுவதாய் அமைந்தாலும், அத்தகைய விடியல் எப்போது நிகழும் என்று நிகழ்காலம் எதிர்பார்த்தவாறே ஒவ்வொரு கணமும் கரைகிறது.



No comments:
Post a Comment