புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்களின் குறைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நாள்தோறும் மாலையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். பொதுமக்கள் தங்களது குறைகளை நேரிலும், கோரிக்கை மனுவாகம் துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை காரைக்காலை சேர்ந்தவர்களிடமும், வெள்ளிக் கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஏனாம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமும், அன்றைய தினம் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையில் மாகி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் குறைகள் கேட்கப்படும் என்று கிரண்பேடி அறிவித்திருந்தார். அதன்படி காரைக்கால் மக்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்ட கிரண்பேடி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதற்காக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கிருந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் கிரண்பேடியிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர். குறைகளை கேட்டறிந்த கிரண்பேடி, அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இன்று வெள்ளிக் கிழமை என்பதால் மாலை ஏனாம் மற்றும் மாகி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கிரண்பேடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக குறைகளை கேட்டறியவுள்ளார். யூனியன் பிரதேசத்தில், முதல்வரை விட, ஆளுநருக்கே அதிக அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment