Latest News

கார்ப்பரேட் வங்கிகள் போல நவீனமாக மாறப்போகும் கூட்டுறவு வங்கிகள் - ஜெ. 110 அறிவிப்பு


அரசு வங்கியோ, தனியார் கார்ப்பரேட் வங்கியோ எல்லாமே நவீனமாக ஸ்மார்ட் ஆக மாறிவிட்டன. ஆனால் ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் கூட்டுறவு வங்கிகள் இன்னமும் சொந்த கட்டிடம் கூட இல்லாமல் எப்போது இடிந்து விடும் என்ற நிலையிலேயே இருக்கிறது. இனி அந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கலாம். வங்கி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட 10 வசதிகளுடன் கூட்டுறவு வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 4,480 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 3,961 சங்கங்கள் சொந்தக் கட்டடங்களில் செயல்படுகின்றன. 519 சங்கங்கள் வாடகைக் கட்டடடங்களில் செயல்படுகின்றன. அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சொந்தக் கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் 100 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு மேலும் 90 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். இதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து 18 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும். கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்திடும் மற்றொரு கூட்டுறவு அமைப்பான தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் இரண்டிற்கு தொடக்க வங்கி வளர்ச்சி நிதியுதவியுடன் 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். மத்திய கூட்டுறவு வங்கிகளின் 9 கிளைகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளின் 2 கிளைகள் என 11 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டடங்கள் 9 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். இவை பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள், குளிர்சாதன வசதி, ஜெனரேட்டர், சூரிய ஒளி வாங்கிகள் போன்ற அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

 கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கிச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படுகின்றன. டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், நவீன இருக்கை வசதி, வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதி, நவீன கவுன்ட்டர்கள், கணினி வசதி மற்றும் குளிர்சாதன வசதி போன்ற சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள், கண்காணிப்பு நிழற்பட கருவி, பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை, நகைப் பெட்டகங்கள், வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம், அபாய எச்சரிக்கை ஒலிப்பான் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 231 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகளின் 67 கிளைகள், 129 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 19 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நவீனமயம் ஆக்கப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 10 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகளின் 2 கிளைகள், 65 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 1 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் 1 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 79 கூட்டுறவுச் சங்கங்கள் 12 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும். இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயலும். 1927ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் உட்பட 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்பட்டு வருகின்றன. இம்மேலாண்மை நிலையங்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, கணினி தொடர்பான பல்வேறு வகையான பயிற்சிகள், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் போன்றவற்றைக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கும் குறுகிய காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில், 10 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் சொயத கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் மேலாண்மை நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவைகளுக்கு படிப்படியாக சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு சொந்த கட்டடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு சொந்த கட்டடம் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும் இந்த ஆண்டு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.