தனது உயிருக்கும், வீட்டிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, "எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை எனது தலைவர் அறைந்தார்" என பேசியது அரசியல் வட்டாரத்தில் இன்னும் பரபரப்பை கூட்டியது.
இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில். டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது உயிருக்கும், வீட்டிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என தகவல் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment