முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் குறித்த தனது இன் மை டிபன்ஸ் புத்தகத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சிலர் விலைக்கு வாங்க முயல்வதாகவும், அதுகுறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கூறி எச்சரித்ததாகவும் ராஜா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இன் மை டிபன்ஸ்... தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.
ஒத்திவைப்பு... சட்டசபைத் தேர்தலுக்காக திமுகவும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்த நிலையில், இந்தப் புத்தகத்தால் பிரச்சினைகள் உருவாகலாம் என கருதப்பட்டதால், புத்தக வெளியீடு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
நவம்பரில் ரிலீஸ்... தற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால கட்டத்தில் தம்முடைய புத்தகத்தை வெளியிட ஆ. ராஜா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
காங். குறித்து விமர்சனம்... இந்நிலையில், அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய சில தகவல்கள் குறித்து கசிந்துள்ளது. அதாவது, தனது புத்தகத்தில் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து அதில் அவர் காட்டமாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தான் காரணம்... அதாவது, ‘2ஜி அலைக்கற்றை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டவையே. மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோர்தான் கூட்டாக முடிவெடுத்தனர். நிறுவனங்களுக்கிடையிலான பூசல் மற்றும் மோதல் காரணமாகவே என் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது' என ராஜா தெரிவித்துள்ளார்.
முடிவுகள்... உலகின் மிகப் பெரிய தொலைதைத் தொடர்பு மையமாக இந்தியாவை உருவெடுக்க வைக்கும் நோக்கில்தான், நல்ல எண்ணத்தில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுகள்தான் என்றும் கூறியுள்ளார் ராஜா.
விலைக்கு வாங்க முயற்சி... மேலும், தன்னை சிலர் விலை கொடுத்து வாங்க முயன்றதாகவும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் முன்பே கூறியதாகவும், அமைச்சர்கள் சிலர் தன்னை நிர்ப்பந்தப்படுத்துவதாக அவரிடம் எச்சரித்ததாகவும்' ராஜா அதில் கூறியுள்ளார்.
அனில் அம்பானி... புதிய உரிமங்களை ஒதுக்குவதற்கு முன்பு சில முன்னணி தொழிலதிபர்கள் என்னிடம் தங்களது சுய விருப்பங்களைத் திணிக்க முயன்றனர். ஏர்டெல், வோடோபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள், சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்த அனில் அம்பானியின் ரிலைன்யன்ஸ் காம் நிறுவன சேவைகளை முடக்க முயன்றனர். மேலும் ரியல் எஸ்டேடில் வலம் வந்து கொண்டிருந்த யுனிடெக் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் பிரவேசிக்க முயன்றது என்று கூறியுள்ளார் ராஜா.
சிபிஐ குற்றச்சாட்டு... இந்த யுனிடெக்கின் புரமோட்டரான சஞ்சய் சந்திரா மற்றும் ஸவான் ரியால்ட்டியின் ஷாஹித் பல்வா ஆகியோரைத்தான் ராஜா தனது இல்லத்தில் வைத்து சந்தித்ததாகவும், அவரக்ளுக்கு சாதகமாக செயல்பட முடிவெடுத்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரும் கூட ராஜாவுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment