என்னை தனிமைப்படுத்த திமுக தலைவர் கருணாநிதி துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்காக என் மீது மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டும், காலத்தால் துடைக்கப்படும் என்றும் வைகோ கூறியுள்ளார். வேலூரில், கிழக்கு மாவட்டம், வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோவின் பேச்சில் அனல் பறந்தது.
கடந்த 1993இல் என் மீது கொலைப் பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றிய பழிச்சொல், காலத்தால் துடைக்கப்பட்டு விட்டது. தற்போது, தேர்தலுக்காக என் மீது மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டும், காலத்தால் துடைக்கப்படும். எனது நேர்மை பற்றி திமுகவினர் பலருக்குத் தெரியும். 22 ஆண்டுகள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு தொண்டர்கள் தான் காரணம். திமுக தலைவர் கருணாநிதியிடம் எல்லாத் திறமைகள் இருந்தும், எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போய் விட்டார். என்னைத் தனிமைப்படுத்த கருணாநிதி துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நான் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மதிமுகவை வளர்த்து வருகிறேன். எனது கவசமே நேர்மை தான். தற்போதைய அரசியல் தலைகீழாக மாறிவிட்டது. சிலர் விலகியதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை. சத்தியம் ஒரு நாள் ஜெயிக்கும். தமிழகத்தின் நலன் காக்க முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை உள்பட பல போராட்டங்களை மதிமுக நடத்தி வெற்றியும் கண்டுள்ளது என்றார் வைகோ.


No comments:
Post a Comment