கடந்த 1995 ம் ஆண்டு, டிசம்பர் 15ம் தேதி, நியூயார்க் டைம்ஸ் அந்த பரபரப்பான செய்தியை வெளியிட்டது. 1974 ம் ஆண்டுக்கு பிறகு, பொக்ரானில் இந்தியா மீண்டும் அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தும் முயற்சிக்கு தயாரகி வருகிறது என்று அந்த செய்தி பற்ற வைத்திருந்தது. அமெரிக்க சாட்டிலைட்டுகள் எடுத்த புகைப்படங்களையும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரை வெளியான ஒரு வாரம் கழித்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பிராங்க் வில்ஸ்னரிடம் இருந்து, பிரதமர் நரசிம்மராவின் தனிச் செயலாளர் அமர்நாத் வர்மாவுக்கு அழைப்பு வருகிறது.
இருவரும் சந்தித்தபோது சில புகைப்படங்களை காட்டி, 'இதுவெல்லாம் உண்மையா...' என அவர் கேள்வி எழுப்புகிறார்.' இந்த புகைப்படங்கள் உண்மையானவைதானா என்று சோதனை செய்து பார்க்க முடியுமா' என அவரிடம் அமர்நாத் வர்மா கேட்டுள்ளார். 'முடியாது' என்று பிராங்க் பதிலளித்து விட்டார். அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி. அவரிடமும், இந்த விஷயத்தைப் பற்றி அமெரிக்க தூதர் விசாரிக்க, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனாக நழுவிவிட்டார்.
உண்மையில் பிரதமராக நரசிம்மராவ் இருந்த போதே, 1995ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அணுகுண்டு வெடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனிடம் இருந்து நரசிம்மராவுக்கு அழைப்பு வந்துள்ளது. 'பிரமரிடம் பேச முடியுமா...?' என்று எதிர்முனையில் இருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. உடனடியாக நரசிம்மராவ், எந்த மாதிரியான கேள்விகள் அவரிடம் இருந்து வரும் என்று அணுகுண்டு விஞ்ஞானிகளிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னரே கிளின்டனிடம் பேசியுள்ளார். எடுத்தவுடன் கிளின்டன் அணு ஆயுத வெடிகுண்டு பரிசோதனை தடை சட்டத்தில் கையொப்பமிடுவது குறித்துதான் பேசத் தொடங்கியுள்ளார்.
பின்னர் ஒரு கொக்கிப் போடுவது போல, " உங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நீங்கள் அணுகுண்டு சோதனைக்கு தயாராகவில்லையென ஆணித்தரமாக கூறியுள்ளது குறித்து ரொம்ப மகிழ்ச்சி' எனக் கூறியுள்ளார். ஆனால் நரசிம்மராவ் எப்படிப்பட்ட ஆள்... அவரிடம் இருந்து அத்தனை சுலபத்தில் ஒரு விஷயத்தை கறந்து விட முடியுமா என்ன? அவரிடம் இருந்து திட்டமிட்ட பதில்கள் தயாராக இருந்தன. நானும் அந்த புகைப்படங்களை பார்த்தேன். 'தவறானத் தகவல்' என பதில் அளிக்க, அப்போது இடையில் புகுந்து பேசிய கிளின்டன், 'அப்போ எங்க சாட்டிலைட்டுகள் எடுத்தது என்ன மாதிரியான புகைப்படங்கள்? 'என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதெல்லாம் ஒன்றுமில்லை... ரொட்டீன் நடவடிக்கைதான்' என்று நரசிம்மராவ் பதில் கூறியுள்ளார். இந்த இந்தியரிடம் இருந்து பதிலை பிடுங்க முடியாது என நினைத்து கிளின்டன் போனை வைத்து விட்டாராம்.
அடுத்து டிசம்பர் 25ம் தேதியன்று ராவுக்கு ஒரு ரகசியத் தகவல் வருகிறது. 'அமெரிக்கா, தொடர்ந்து கடுமையான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அணுகுண்டு வெடிப்பை தள்ளிப் போடுங்கள்' என்று சொல்லப்படுகிறது. 'குண்டு வெடிப்பை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப் போடுங்கள்' என்றும் அதில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே, அணுகுண்டு வெடிப்பு அப்போதைக்கு தள்ளி போடப்பட்டது. இந்த சமயத்தில்தான் அணுகுண்டு வெடிப்பு தடைச் சட்டம் (சி,டி.பி.டி) தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு தலைமை தாங்கிய அப்துல்கலாம், ஜனவரி 9ம் தேதி ராவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், 'சிடிபிடியில் கையெழுத்து போட்டு விடாதீர்கள்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் சில பொருளதார நிபுணர்களிடம் ஒரு மாத காலமாக நரசிம்மராவ் ஆலோசனை நடத்துகிறார். 'அணுகுண்டு வெடித்தால் வரும் தடைகள் என்ன... அவற்றை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்?' என்று ஆலோசனை கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவோ விடாமல் வேவு பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. 1996ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் மீண்டும் ஒரு முறை அமெரிக்க அதிபரிடம் இருந்து நரசிம்மராவுக்கு அழைப்பு. இந்த முறை கொஞ்சும் கூடுதல் ஆதாரங்களுடன், கிளின்டன் கேள்வி கேட்டுள்ளார். 'நீங்கள் அணுகுண்டு பரிசோதனை நடந்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. உண்மையா?' என்று நேரடியாகவே கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பின், இருவருக்குள் நடந்த சம்பாஷனைகள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் விடாப்பிடியான நடவடிக்கைகளால் நரசிம்மராவால் வெடிப்பு சோதனையை நடத்தவே முடியவில்லை.
அதற்கு பிறகு அப்துல் கலாமை அழைத்த நரசிம்மராவ், ' மே மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது. அதற்காக நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. நீங்கள் உங்கள் குழுவினருடன் எப்போதும் தயராக இருங்கள் ' என தெரிவித்துள்ளார். நரசிம்மராவுக்கு தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்து விடுவோம். அதற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்.
ஆனால் நடந்ததோ வேறு.. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து விட்டது. 1996ம் ஆண்டு, மே 16ம் தேதி புதிய பிரதமராக வாஜ்பாய் பதவியில் அமர்ந்தார். நரசிம்மராவ், அப்துல் கலாம், ப.சிதம்பரம் ஆகியோர் புதிய பிரதமர் வாஜ்பாயை சந்திக்கின்றனர். அணுகுண்டு விஷயத்தை உடைக்கின்றனர். ஆனால் வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழ்ந்து விட்டது, அடுத்து தேவ கவுடா, சந்திரசேகர் என பிரதமர் பதவியில் யாரும் நிலையாக இல்லை. தொடர்ந்து 1998 ம் ஆண்டு வாஜ்பாய் 2வது முறையாக ஆட்சியில் அமரும்போது அணுகுண்டை வெடிக்க உத்தரவிட்டார். இப்படிதான் கடந்த 1998 ம் ஆண்டு, பொக்ரானில் 2வது முறையாக இந்தியா அணுகுண்டை பரிசோதிக்க, உலகமே அலறியது.
இந்தியா அணுகுண்டு வெடித்த கதைக்கு பின்னால், நரசிம்மராவ் இருக்க, அதனை வெடிக்க வைத்தவர் என்ற பெருமை மட்டுமே தனக்கு உண்டு என பிரதமர் வாஜ்பாயே கூறியுள்ளார். நரசிம்மராவின் உடல் எரியூட்டப்பட்ட பின், 2 நாட்கள் கழித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயே, தனது நண்பர் குறித்து பேசுகையில், 'அணு குண்டு தயார்... எப்போது வேண்டுமானாலும் வெடியுங்கள்!' என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தவர் நரசிம்மராவ். இந்திய அணுகுண்டு வெடிப்பு நிகழ்வுக்கு உண்மையான தந்தை அவர்தான் என்று புகழாரம் சூட்யுள்ளார்.
நரசிம்மராவைப் போலவே அவரது சாதனையும் அமைதியாகவே இருந்து விட்டது.
நன்றி : ஆனந்த விகடன்
No comments:
Post a Comment