அடுத்த 48 மணி நேரத்திற்குள், தென்மேற்கு பருவமழை கேரளாவில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக சென்னை வானிலை இலாகா அறிவித்துள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அது கூறியுள்ளது. நாட்டுக்கு அதிக அளவில் மழையை கொண்டுவந்து சேர்ப்பது தென் மேற்கு பருவமழை காலம். நான்கு மாதங்கள் நீடிக்கும் பருவமழை ஜூன் 1ம் தேதியையொட்டி கேரளாவில் கால் பதிப்பது வழக்கம். படிப்படியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பருவமழை பரவும். இவ்வாண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக வருகை தரும் என கணிக்கப்பட்டது. இப்படி தாமதமாக பருவமழை தொடங்குவது கடந்த 50 வருடங்களில் இதுதான் முதல்முறை.
ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா சில தினங்கள் முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கும்பகோணத்தில் 5 செ.மீ மழையும், வேதாரண்யம், செட்டிகுளத்தில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கோத்தகிரி, மானாமதுரை, தளி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை, அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment