அரசியல் கட்சியினரின் பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சில போலீஸ் அதிகாரிகள் மீது ரகசிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி
வருகிற 16–ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் பிரசாரம் அல்லது பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும்.
எந்த அரசியல் கட்சியினர் முன்னதாக விண்ணப்பம் கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சமீபத்தில், கன்னிவாடியில் பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி அளித்ததில் தி.மு.க., தே.மு.தி.க. இடையே பிரச்சினை ஏற்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கு சாதகம்
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் சில போலீஸ் அதிகாரிகள், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பதில் அரசியல் கட்சியினருக்கு இடையே பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதாவது சில அரசியல் கட்சியினருக்கு மட்டும் போலீசார் உடனுக்குடன் அனுமதி அளிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சில போலீஸ் அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகளை ரகசியமாக கண்காணித்து விசாரணை நடத்த, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எந்த அரசியல் கட்சியினர், எந்த தேதியில் போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்கின்றனர்? அவர்களுக்கு அனுமதி எப்போது அளிக்கப்படுகிறது? என்பன போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment