உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் இன்று முதல்கட்ட பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 39 இடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இன்று பொது மருத்துவ நுழைவுத் தேர்வின் முதல்கட்ட தேர்வு நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக ஜூலை 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேசிய தகுதி காண் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெற்றது. 39 இடங்களில் நடைபெற்ற இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 26,000 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு அறைக்குள் மாணவர்கள் எவ்வித பொருள்களையும் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு, மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஷூ அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாணவிகள் தோடு, செயின் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு கடுமையான சோதனைக்குப் பின்னரே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் குழப்பமான மனநிலையிலேயே தேர்வை எதிர்கொண்டதாக பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment