அதிமுக தேர்தல் அறிக்கை மம்மி வெளியிட்ட டம்மி அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். அதேநேரத்தில் அதிமுகவின் ஒரு "டம்மி" அறிக்கையை, தேர்தல் அறிக்கையாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பெரும்பாலும் திமுக தேர்தல் அறிக்கையின் நகலாகவே உள்ளது. மழை வெள்ளத்தின் போது எப்படி தன்னார்வலர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களில் "ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்" களை ஒட்டி தங்களுடையது என்றார்களோ, அதுபோலவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் "ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்" ஒட்டப்பட்டு, அதை ஜெயலலிதாவே வெளியிட்டு இருப்பது விசித்திரமானது. தான் செய்த தவறுகளில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்பதாக இல்லை. "நமக்கு நாமே" பயணத்தை போன்றதொரு பயண அனுபவத்தை பெறாத வரையில் அவரால் திமுவின் தேர்தல் அறிக்கைக்கு ஈடானதொரு அறிக்கையை தயாரிக்க முடியாது. பொதுமக்கள் அளித்த ஆயிரக்கணக்கான கோரிக்கைகள், ஆலோசனைகளில் இருந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரானது. இதற்கு முன்பாக தான் அளித்த வாக்குறுதிகளையாவது இதுவரை ஜெயலலிதா படித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். கிட்டதட்ட 2400 விவசாயிகள் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்தபோது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, இப்போது விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 2006 -ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்தில் மொத்தம் 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தார். கடந்த 5 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழுக்களை முடக்கி, பல லட்சக்கணக்கான பெண்களின் பொருளாதாரத்தை சீரழித்த ஜெயலலிதா, இப்போது மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்குவேன் என்று அறிவித்து பெண்களை ஏமாற்ற முயல்கிறார். அதைவிட வேடிக்கை என்னவென்றால், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நதி நீர் இணைப்பு என்றால் என்ன என்பதாவது அவருக்கு தெரியுமா ? ஒவ்வொரு முறையும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்த முயற்சிக்கும் போதும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, தடுத்து நிறுத்துவதையே வழக்கமாக கொண்டவர் அவர், அதுமட்டுமல்ல, நேற்று காலையில் கூட சென்னையில் உள்ள மதுரவாயல், நொளம்பூர் உட்பட பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் காவல்துறையை ஏவி கொடூரமாக தாக்கிய ஜெயலலிதா, மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று கதையளக்கிறார். 2011 - சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 54 வாக்குறுதிகள், 2014 - எம்.பி. தேர்தலின் போது அளித்த 43 வாக்குறுதிகள், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த 600 க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் என ஜெயலலிதாவின் எல்லா அறிவிப்புகளுமே கானல் நீர் போல, நம்ப வைத்து ஏமாற்றுவதாகவே உள்ளன. தவறான நம்பிக்கைகள், பொய்யான வாக்குறுதிகள் ஆகியவற்றை மட்டுமே மூலத்தனமாக கொண்டு பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை ஏமாற்றி விடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். ஆனால், வளர்ச்சியை முன்னிறுத்தும் புதிய விடியலுக்கான நேரம் வந்து விட்டது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment