தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்த நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில்தான் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 378 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடும் வேளச்சேரி, மாஜி டிஜிபி நடராஜ் போட்டியிடும் மயிலாப்பூரில் தலா 25 பேர் களத்தில் உள்ளனர். பெரம்பூர் தொகுதியில் 33 பேர் போட்டியில் உளளனர். வில்லிவாக்கம், ராயபுரம் தொகுதியில் தலா 17 பேர் இறுதியாக களத்தில் நிற்கின்றனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் எத்தனை பேர் இறுதியாக களத்தில் நிற்கின்றனர் என்ற முழு விவரம் இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும். மே 16ம் தேதி தமிழகசட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி முடிவடைந்தது. இதில் 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஆண்களே அதிகம், அதாவது 6358 பேர். பெண்கள் 794 பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர். வேட்பு மனு பரிசீலனையின்போது 2956 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஷாக் சம்பவமும் நடந்தேறியது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு அவர்களது விருப்பம் மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப சின்னம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். ஒரே சின்னத்தை இரு சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டால், அந்த சின்னம் குலுக்கல் முறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் இடம் பெறும். அந்த பட்டியலில் முதலில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர் அகர வரிசைப்படி இடம் பெற்றிருக்கும். அவர்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர் இடம்பெறும். அதன்பிறகு இறுதியில் சுயேட்சை வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி இடம்பெறும். வேட்பாளர் பட்டியல் அவர்களுக்குரிய சின்னம் விபரத்துடன் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களின் வெளியில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படும். அந்த பட்டியலில் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன் அவர்களது புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு எந்திரங்கள் பிரிக்கப்படும். அந்த எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம், போட்டோவுடன் கூடிய ஓட்டு சீட்டு ஒட்டப்படும். இந்த ஓட்டுச் சீட்டுகள் அச்சிடும் பணி நாளை தொடங்குகிறது. அதுபோல தபால் ஓட்டுக்கான சீட்டுக்களும் அச்சிடப்படும். ஓரிரு நாட்களில் இந்த பணி முடியும்.


No comments:
Post a Comment