ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர்கள் 20 பேரை கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, பல இடங்களில் பேருந்துகளில் இருந்து இறக்கி கடத்திய ஆந்திர சிறப்புக் காவல்படையினர், ரகசிய இடத்தில் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி பின்னர் சுட்டுக் கொன்றனர்.இந்த வழக்கில் 20 தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை எனகூறி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற ஆந்திர காவல்துறை முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இக்கொலை வழக்கில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாளுக்கு ஆந்திரக் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. ஆந்திர காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஆணையிடக்கோரி பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களின் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதே கோரிக்கைக்காக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. ஆந்திர அதிரடிப் படையினரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருந்த ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, எந்த ஆதாரமும் இல்லை என்று இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு நாடகமாடுகிறது. இது குறித்து அக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை முடிக்கக்கோரும் மனுவை திருப்பதி விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
ஆந்திரக் காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை நிற்பது தான் கொடுமை. ஆரம்பத்தில் இருந்தே கொல்லப்பட்ட தமிழர்களை செம்மரக்கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்துவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டியது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட போது, அவர்களின் உடல்களை உடனடியாக எரிக்கும்படி குடும்பத்தினரை மிரட்டியது. இந்த சிக்கலில் பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலோ அல்லது பா.ம.க. தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்துக் கொண்டிருந்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால், வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் தான் ஆந்திர அரசுக்கு இந்த அளவு துணிச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனு நிலுவையில் இருக்கும் நிலையில், இவ்வழக்குக்கு மூடுவிழா நடத்தும் ஆந்திரக் காவல்துறையின் திட்டம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை எடுக்கும். இதற்காக பா.ம.க. வழக்கறிஞர்கள் குழு விரைவில் ஆந்திரா செல்லும். இவ்வழக்கில் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை பா.ம.க. பெற்றுத் தரும். பாதிக்கப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இருந்தால் இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு நீதிக்காக போராட முன்வர வேண்டும்.''என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment