வரும் தேர்தலில் 150 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் புதன்கிழமை தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு மேடையில் வாக்களிக்க பணம் தரமாட்டோம், பணம் வாங்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூற, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனர்.
மாநாட்டில் வைகோ பேசுகையில், "தமிழகத்தில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.38 கோடியாகும். இதில் 1.20 கோடி வாக்காளர்களின் வாக்கு எங்கள் அணிக்குத்தான். இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். விவசாயிகளின் துயரத்தைப் போக்கும் சக்தி கொண்ட எங்களது கூட்டணிக்குத்தான் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 92 சதவீதம், தெலங்கானாவில் 89.9 சதவீதம் விவசாயிகள் கடனாளிகளாக இருக்கின்றனர். தமிழகத்தில் 82 சதவீதம் விவசாயிகள் கடனாளியாக உள்ளனர். அவ்விரு மாநில அரசுகளும் கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, ஏன் தமிழகத்தில் செய்ய முடியாதா? விஜயகாந்த் தலைமையிலான அரசு அமையும் போது நாங்கள் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக-தமாகாவுக்கு வாக்களிக்க கூறுங்கள். ஜனநாயக புரட்சி. மௌனப் புரட்சியை நிகழ்த்த போவது இளைஞர்கள் சக்திதான்," என்றார்.
No comments:
Post a Comment