Latest News

”தேர்தல் செலவுக்கு கையில் காசில்லைங்க...சீட் வேணாம்”.. இப்படியும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ!


சென்னையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஒருவர் தேர்தலுக்காக செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டிபோட விரும்பவில்லை என்று கூறியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பிரிக்ளின் ரோட்டில் ரோட்டோர சைக்கிள் கடை நடத்தி வருகிறார். விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் இந்த தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி தலைமையிடமே கூறி விட்டார்.

இதுகுறித்து அவர், "உண்மைதான். போட்டியிட விருப்பமனுவும் கொடுத்து இருந்தேன். ஆனால் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் போட்டியை சமாளிக்க செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. எனவே போட்டியிட விரும்பவில்லை என்று கேப்டனிடம் கூறினேன். நான் மிக சாதாரண மானவன். பட்டா இல்லாத அரசாங்கம் கொடுத்த கல்நார் ஓட்டு வீட்டில்தான் குடியிருக்கிறேன். ரோட்டோர சைக்கிள் கடை நடத்தி பிழைப்பு நடத்தினேன். சட்டசபையை எட்டிகூட பார்க்க முடியாத என்னை சட்ட சபைக்குள் அமர்த்தி அழகு பார்த்தவர் கேப்டன். கடைசி காலம் வரை தே.மு.தி.க.வில்தான் இருப்பேன். எம்.எல்.ஏ. சம்பளமாக மாதம் ரூபாய் 55 ஆயிரம் கிடைத்தது. அதில் பி.ஏ. சம்பளம், அலுவலக நிர்வாக செலவுகள், போக்குவரத்து செலவுகளை சமாளித்து குடும்பம் நடத்தி வருகிறேன். சேமிப்பு என்று எதுவும் இல்லை. எனது குழந்தைகள் படிப்புக்காக இப்போது பக்கத்து தெருவில் ரூ.6 லட்சம் லீஸ் வீட்டில் வசிக்கிறேன். 6 மாதம் சஸ்பெண்டில் இருந்த போது மாதம் ரு.10 ஆயிரம் குடும்ப செலவுக்கு கேப்டன் தந்தார். இந்த 5 ஆண்டில் யாரிடமாவது கை நீட்டினார், மிரட்டி பணம் வாங்கினார் என்று என் மீது எந்த புகாரும் கிடையாது. ஜாலியாக இருக்கிறேன். இந்த அரசு ஒரு எம்.எல்.ஏ. அலுவலகம் கூட ஒதுக்கியது கிடையாது. எனது சைக்கிள் கடையைதான் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறேன். எனது நிலையை பார்த்து அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பல ஆசைகளை காட் டி கூப்பிட்டார்கள். ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை தருவதாக பேரம் பேசினார்கள். எத்தனை கோடிகள் கிடைத்தாலும் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன். தெருக்கோடியில் இருந்தாலும் கேப்டனின் தொண்டனாகவே இருப்பேன். நான் போட்டியிடவில்லை என்றதும் ஏண்டா, தேர்தலில் நில்லு என்று கேப்டனும், சுதீசும் வற்புறுத்தத்தான் செய்தார்கள். ஆனால் செலவு செய்ய முடியாததால் நான் மறுத்து விட்டேன். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் பணிகளை தாருங்கள் என்றேன். இப்போது அண்ணியாருடன் (பிரேமலதா) பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளார். மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.