Latest News

  

ஸ்டாலினை சந்தித்த கராத்தே தியாகராஜன்... மயிலையில் வெற்றிக்கனி பறிப்பாரா?


மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார். சென்னை மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களத்தில் இருப்பவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஆர். நட்ராஜ். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் களமிறங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் நடராஜின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது என்று உற்சாகப்படுகின்றனர் அதிமுகவினர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

2001ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியின் மேயராக ஸ்டாலின் பதவி வகித்தார். அப்போது அதிமுகவில் இருந்த கராத்தே தியாகராஜன், துணை மேயராக பதவியில் இருந்தார். அப்போது சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற போர்க்கள காட்சிகளை வரலாறு அறியும். எனவேதான் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே நேற்று ஸ்டாலினிடம் போனில் சமாதானமாக பேசி ஆதரவு கேட்டிருக்கிறார். அதற்கு முன்பாகவே திமுக தலைவர் கருணாநிதியை ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் வீட்டில் போய்ப் பார்த்துப் பேசினார். இன்று காலை மு.க.ஸ்டாலினை அவர் வீட்டிற்கே நேரில் போய்ப் பார்த்து, பழசையெல்லாம் மறந்துடுங்க தளபதி, கட்சிக்காரங்களை வேலை செய்யச் சொல்லுங்க என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம் கராத்தே தியாகராஜன். இவர்கள் இருவருக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மனதில் ஓட்டிப்பார்க்கின்றனர் திமுகவினர். 2001ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன், ஜெயலலிதாவிடம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக அப்போதய மேயர் ஸ்டாலினை ரிப்பன் மாளிகைக்குள்ளேயே நுழைய விடாமல் செய்தார். இவர் தொல்லையால் தான் ஸ்டாலின் தன் பதவியையே ராஜினாமா செய்தார். அதன் பின்னர் 2006 வரையில் கராத்தே தியாகராஜனே மேயராக இருந்து மாநகராட்சியை வழிநடத்தினார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கராத்தேவுக்கு ஸ்டாலினும், திமுகவினரும் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. எனவேதான் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். என்னதான் ஸ்டாலின் உத்தரவிட்டாலும், உள்குத்து குத்தாமல் வேலை செய்து கராத்தே தியாகராஜனை ஜெயிக்க வைத்து விடுவார்களா உடன் உடன்பிறப்புகள் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினரின் சந்தேகம். எனவேதான் மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் நடராஜின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது என்று உற்சாகப்படுகின்றனர் அதிமுகவினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.