சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் வே. வசந்திதேவி. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 13 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அக்கட்சியின் வேட்பாளராக கல்வியாளர் வசந்திதேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும், ஆர்.கே.நகரில் வசந்திதேவி போட்டியிடுவார் என்றும் கூறினார். மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணைந்த தேர்தல் அறிக்கை வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்படும். ஆர்.கே.நகர் தொகுதி விருப்பத்தின்படிதான் தேர்வு செய்தோம். யாரையும் வீழ்த்தவேண்டும் என்று களத்தில் இறங்கவில்லை. வெற்றி பெறுவதே நோக்கம் என்று கூறினார். ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் வே.வசந்திதேவி 1938ஆம் ஆண்டில் பிறந்தவர். சொந்த ஊர் திண்டுக்கல். வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பிஎச்.டி. பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டுமுறை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாகப் பணியாற்றினார். தமிழ்நாடு திட்டக்கமிஷனின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கல்வியாளரான வசந்திதேவி இடதுசாரிகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியினை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு பெற்றிருந்தாலும், இது பொது தொகுதி என்பதால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் பொது வேட்பாளராகவே வசந்திதேவி நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ம் ஆண்டுமுதல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் ஜெயலலிதா, தேர்தலில் வெற்றி பெறும் காலங்களில் தமிழக முதல்வராகவும், கட்சி தோல்வியை சந்தித்தாலும் ஜெயலலிதா எதிர்கட்சித்தலைவராகவும் பதவி வகித்து அனுபவம் பெற்றுள்ளார். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் ஜெயலலிதாவை, அரசியலில் அறிமுகமாகியுள்ள வேட்பாளரான வசந்திதேவி எதிர்த்து போட்டியிடுகிறார் வசந்திதேவி. ஆர்.கே.நகரில் ஏற்கனவே போட்டியிட்டு சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கிறார் ஜெயலலிதா. கல்வியாளர்கள், இடதுசாரியாளர்கள், பெண்கள் அமைப்பினர் மத்தியில் மட்டுமே அறிமுகமாகியுள்ள வசந்திதேவி ஆர்.கே.நகர் வாக்காளர்களை எந்த அளவிற்கு கவருவார் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.


No comments:
Post a Comment