விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 15 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் களம் இறங்குகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1999-ம் ஆண்டு சட்டசபை, லோக்சபா தேர்தல்களைப் புறக்கணித்து வந்தது. 1999-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் வலியுறுத்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் களத்துக்கு வந்தது. 1999 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தொல். திருமாவளவன், 2,25,000 வாக்குகளைப் பெற்றபோதும் தோல்வியைத் தழுவியிருந்தார். பின்னர் 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது விடுதலைச் சிறுத்தைகள். அத்தேர்தலில் மங்களூர் சட்டசபை தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிதம்பரத்தில் வெற்றியும் தோல்வியும்... பின்னர் 2004 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தோற்றார் திருமாவளவன்; 2009-ல் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2014ல் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் திருமாவளவன்.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 11 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தார் திருமாவளவன்.
வசந்திதேவி, திருமாவளவன் வேட்பாளர்கள் சென்னையில் இன்று 2-ம் கட்டமாக 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார். அதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் கல்வியாளர் வசந்திதேவி போட்டியிடுவார் என்றும் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தாம் போட்டியிடுவதாகவும் அறிவித்தார் திருமாவளவன். 15 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
காட்டுமன்னார்கோவில் ஏன்? இது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், லோக்சபா தேர்தல்களில் தாம் தோற்றபோதும் சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகளே அதிக வாக்குகளைப் பெற்று வந்துள்ளது என சுட்டிக்காட்டினார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையிலும் மதிமுக பொதுச்செயலர் வைகோ கோவில்பட்டி தொகுதியிலும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment