தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் நாளில் இருந்தே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக வலியுறுத்தியுள்ளது இதுதொடர்பாக தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், தேர்தல் கணிப்புகள் வெளியிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1951, 126-வது பிரிவின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில், எந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார், யார் தோல்வியடைவார், எந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற வகையிலான செய்திகளை வெளியிடுகின்றனர். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றமாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. தற்போது, பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு ஆதரவான கட்சிகள் குறித்து மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை திணித்து வருகின்றனர். வாக்காளர்களை குழப்பும் வகையில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். எனவே, தமிழகத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment