Latest News

பா.ஜ.க- த.மா.கா இடையே கூட்டணி பேச்சு நடைபெறுகிறது... தமிழிசை சவுந்தரராஜன்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் திமுக கூட்டணியில் தமாகாவை சேர்க்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தையை தமாகா நடத்தியது. தமாகாவுக்கு அதிமுகவும் 15 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. ஆனால் தமாகா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது அதிமுக. இதனை தமாகா ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தமாகாவில் ஒருமித்த கருத்து ஏற்படுமா எனத் தெரியவில்லை. அப்படி தமாகாவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம். ஊழலை ஒழிக்க விரும்பும் தமாகா, பாஜக கூட்டணியில்தான் இணைய வேண்டும் என்றார். கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறும் வாசனுக்கு எதிராக தமாகாவில் போர்க்கொடி தூக்க தலைவர்கள் தயாராகிவிட்டனர். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமாகா நிச்சயம் உடையும் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.