முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார கூட்டங்களில் வெயிலின் கோரத்தாண்டவத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் நாளை ஜெயலலிதாவின் அடுத்த பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்துக்காக அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் 5 பேர் வெயிலில் சுருண்டு இறந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நாளை ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கந்தர்வகோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 19 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில்தான் வருகிறார். இருப்பினும் திருச்சி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல திருச்சி போலீஸ் கமிஷனர் தடை விதித்துள்ளார். இதனால் கனரக வாகனங்கள் மாற்று வழியாக பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லும் கனரக வாகனங்கள் திருச்சிக்குள் செல்லாமல் பெரம்பலூரில் இருந்து முசிறி குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியே சுற்றி சென்று நான்கு வழிச்சாலையை பிடிக்க வேண்டும். சென்னையில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி வராமல் பெரம்பலூரில் இருந்து குன்னம், அரியலூர், திருவையாறு, தஞ்சை, புதுகை செல்ல வேண்டும். இதனால் கனரக வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


No comments:
Post a Comment