சட்டசபை தேர்தலில் ஆதரவளித்த அமைப்புகளுக்கு அதிமுக சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கியதாகவும் அதில் ரூ. 25 ஆயிரம் குறைவாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தேர்தலில் திமுகவுக்கும் அதி முகவுக்கும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவித்தன. இவற்றில், அதிமுகவுக்கு ஆதரவளித்த அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் நேற்று, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு அமைப்புக்கும் இரண்டு 500 ரூபாய் கட்டுகள் வீதம் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதில் ரூ.25 ஆயிரம் குறைவாக இருந்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தார். 'இயற்கை விவசாயத்தை அ.தி.மு.க முன்னெடுக்கும் என்ற உறுதிமொழியைக் கொடுத்ததால், ஆதரவு கொடுத்தோம்' எனவும் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், ' உங்கள் அமைப்பின் லெட்டர் பேடை எடுத்துக் கொண்டு தலைமை அலுலலகம் வாருங்கள்' எனக் கூறியுள்ளார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். உடனே மகிழ்ச்சியோடு தனது அமைப்பின் நிர்வாகியை அனுப்பியுள்ளார், அவரிடம் இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுக்களைக் கொடுத்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என எண்ணிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதிலும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் குறைந்திருக்கிறது. உடனே, பணக்கட்டுகளை அ.தி.மு.க நிர்வாகிகளிடமே திருப்பிக் கொடுத்தவருக்கு, உழவர் உழைப்பாளர் சங்கத்தின் லெட்டர் பேடு அறிக்கையை திருப்பிக் கொடுக்கவில்லையாம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொங்கலூர் இரா.மணிகண்டன், ``இயற்கை விவசாயத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்து வதாக உறுதி கொடுத்தால் நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று போயஸ் கார்டனில் நாங்கள் கடிதம் கொடுத்திருந்தோம். அது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில், நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர்களே அறிவித்துக்கொண்டார்கள். இந்த நிலையில் வெள்ளிக் கிழமை அன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு லெட்டர் பேடுடன் வரச் சொன்னார்கள். `லெட்டர் பேடு எதற்கு?' என்று கேட்டதுக்கு, உங்களுடைய கோரிக்கைகளை அம்மாவுக்குத் தெரிவிப்பதற்காக என்று சொன்னார்கள். என்னால் வரமுடியாது என்றதும் உங்களுடைய பிரதிநிதியை அனுப்பிவையுங்கள் என்றார்கள். அதன்படி எங்களுக்கு முன்பாக அதிமுக தலைமைக் கழகத்துக்கு போன சில அமைப்புகளுக்கு இரண்டு 500 ரூபாய் கட்டுகளை கொடுத்துவிட்டு, அவர்கள் கொண்டு போன லெட்டர் பேடு தாளில் வெறுமனே, ‘பெற்றுக் கொண்டேன்' என்று மட்டும் எழுதி அமைப்புகளின் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.
அந்த 500 ரூபாய் கட்டு களை பிரித்து எண்ணிப் பார்த்த போது அதில் ரூ. 25 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது. பணம் வாங்குவது எங்களது நோக்கம் இல்லை என்றாலும் உண்மையை தெரிந்து கொள்வதற்காக நானும் எனது பிரதிநிதியை அனுப்பி வைத்தேன். எனது பிரதிநிதியிடமும் அதேபோல் இரண்டு 500 ரூபாய் கட்டுகளை தந்துவிட்டு கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். அதிலும் 25 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. இதில் ஏதோ தவறு நடப்பதாக தெரிந்ததால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நானே அதிமுக தலைமையகத்துக்குப் போனேன். அங்கிருந்த அலுவலர்களிடம், `உங்களிடம் நாங்கள் பணம் கேட்டோமா, எதற்காக எங்களை இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், விதண்டாவாதம் பண்ணாதீங்க.. பணம் வேண்டாம்னா குடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க. அவங்கக்கிட்ட பணத்தை திருப்பிக் குடுத்துட்டு, எங்களோட லெட்டர் பேடு தாளை திருப்பிக் கேட்டேன். `அத மேல அனுப்பி வைச்சாச்சு'ன்னு சொல்லி, தர மறுத்துட்டாங்க. 500 ரூபாய் கட்டு ஒவ்வொன்றிலும் 50 ஆயிரம் ரூபாய் இருப்பதாக மேல் பகுதியில் எழுதிருக்கு. ஆனா, 25 ஆயிரம் ரூபாய் குறைவாக அங்க இருக்கவங்க முதல்வருக்கு தெரியாம ஏதோ தப்புப் பண்றாங்கன்னு தெரியுது. அதேசமயம் அந்த 75 ஆயிரத்தையும் வாங்குவதற்காக நின்றவர்கள் சத்தம் போட்டு காரியத்தை கெடுத்துடாதீங்கன்னு சொல்றாங்க. தேர்தல் செலவுக்காக அம்மா குடுக்கச் சொன்னாங்கன்னுதான் இந்தத் தொகையை குடுத்துருக்காங்க. 75 ஆயிரம் ரூபாய்க்காகவா அமைப்புகளை அடமானம் வைப்பாங்க? என்று கேட்கிறார் மணிகண்டன். கடந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு 307 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இவர்களுக்கு தலா ஒரு லட்சம் என கணக்குப் போட்டால்கூட மூன்று கோடி ரூபாய் வருகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுக்கும் அமைப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிட்டது. காரணம் பணம் கிடைக்கும் என்பதுதான். இதில், பெரும்பாலான சங்கங்களுக்கு அலுவலகமே கிடையாது. வீட்டு முகவரியில்தான் இயங்குகிறார்கள். திமுக, அதிமுகவில் எப்போதுமே நடக்கும் பணப்பரிவர்த்தனைதான் இது என்கிறார் ஒரு அரசியல் பிரமுகர். அதெல்லாம் சரிதான், ஆதரவு கொடுத்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு லட்சம் கொடுக்கச் சொன்னால் அதிலும் ரூ. 25 ஆயிரத்தை ஆட்டையை போடுகிறார்களே.... இதை பார்க்கும் போது ஏதோ பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment