திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது... ஆனால் இதை விரும்பாமல் இப்படி ஒரு கூட்டணியே அமைந்துவிடக் கூடாது என்பதற்காக "நாம் கேட்டதை திமுக தரவில்லை" என்று திசைதிருப்ப மிக கடுமையான நிபந்தனைகளை திமுகவுக்கு விதித்திருக்கிறது விஜயகாந்த் தரப்பு. சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இயல்பான வியூகம். இதனால் திமுக- தேமுதிக இணைந்து கூட்டணி அமைத்தால் நிச்சயம் ஜெயலலிதாவை வீழ்த்திவிடலாம் என்பது இரு கட்சித் தொண்டர்களின் எண்ணம். தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவும் இணையும்போது வலுவான கூட்டணியாக அமைந்துவிடும். இதனால்தான் திமுகவுடனே கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விஜயகாந்த்தை வலியுறுத்தி வருகின்றனர்.
விரும்பாத பிரேமலதா ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவோ, திமுகவுடன் கூட்டணி அமைப்பதை சற்றும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட 'லாபம்' அதிகமாக கிடைக்கும் அணிக்கு தாவுவதுதான் விஜயகாந்த் குடும்பத்தின் திட்டமாக இருந்து வருகிறது. இதனால் அரசியல் அரங்கத்தில் அவர் "மாட்டு வியாபாரியாக"வே சித்தரிக்கப்பட்டும் வருகிறார்.
திமுக தரலையே... இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி நாங்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் நாம் கேட்டதை தராமல் வெறும் 50 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது திமுக. இதனால்தான் இந்த கூட்டணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார்.
தேமுதிக நிபந்தனைகள் அப்படி என்னதான் திமுகவுக்கு தேமுதிக நிபந்தனைகள் விதித்தது? மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3-ல் ஒரு பங்கான 78 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்; துணை முதல்வர் பதவி தர- 10 அமைச்சர்கள் பதவி தர வேண்டும்; அத்துடன் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்க இப்போதே ஒப்பந்தம் போட வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிபந்தனை.
திமுக நிலை ஆனால் திமுகவோ, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை; 50 தொகுதிகளைத்தான் தர முடியும்... வேண்டுமெனில் இந்த தொகுதிகளில் ஒன்றிரண்டு கூடுதலாக பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறது. இதுதான் திமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கிற முட்டுக்கட்டையாம்.
No comments:
Post a Comment