தேமுதிக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பிரேமலதாவை முன்னிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர். திமுகவில் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் எனக் கூறப்பட்டாலும் ஸ்டாலின் கை தான் ஓங்கியுள்ளது.
பாமக வெளிப்படையாகவே அன்புமணி ராமதாஸ்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி, யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை என கூறிவந்தது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் கிங்தான்.. கிங்மேக்கர் இல்லை என்று அறிவித்திருக்கிறார். அதாவது தம்மை முதல்வர் வேட்பாளராக யார் ஏற்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பது விஜயகாந்த் நிலை. இதை பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும் ஏற்பதாக அறிவித்திருக்கிறார்கள். பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்த் தங்களது அணிக்கு வந்தால் அவரே முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக பிரேமலதாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாமே என்ற கருத்தும் தேமுதிகவில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம்... இது தொடர்பாக பாஜகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேசியிருக்கின்றனராம். இந்த தகவல் தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment