Latest News

  

இயற்கை உரத்திற்கு வழிகாட்டும் பெண்



இயற்கை உரத்திற்கு வழிகாட்டும் பெண்


''சென்னையின் மிகப்பெரிய பிரச்னை குப்பை. அதை, எப்படி குறைப்பது?'' என்ற நம் கேள்விக்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, குப்பை மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்தி வரும், நவ்னீத் ராகவன், 58. கூறியதாவது: சென்னையில், ஒரு வீட்டை இடித்து, பத்து வீடுகள் கட்ட துவங்கிய பின் தான், குப்பை ஒரு பிரச்னையாக மாறிப்போனது. அதே நேரம், குப்பையை கையாள்வதை கேவலமாகவும், மனித மனம் பார்க்கத் துவங்கியது. தற்போது, நம் வீட்டில் இருந்து, குப்பை சென்றால் போதும் என்ற மனநிலை தான் அனைவரிடமும் உள்ளது. இது மாற, குப்பை பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் வர வேண்டும். முடிந்த அளவு, வீட்டிலேயே குப்பையை குறைக்கும் முறைகளை கற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை வாங்க செல்லும் போது, துணி, கோணி பைகளை எடுத்துச் செல்லலாம். அப்படியாக தான், வீட்டில் பிளாஸ்டிக் பைகளின் சேர்க்கையை குறைக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்கும் பொருட்களை வாங்குவதை குறைக்க வேண்டும்.

புரிதல்:

நாம் கொட்டும் குப்பையில், உயிர்ச்சூழலால் சிதைபடும் குப்பை, 60 சதவீதமும், மறுசுழற்சி செய்யும் குப்பை, 20 சதவீதமும், மருத்துவ கழிவுகள், 10 சதவீதம், மின்னணு கழிவுகள், 10 சதவீதம், மற்றும் குப்பைக்கு மட்டுமே போக வேண்டிய குழந்தைகளின் டையாபர், பெண்களின் நாப்கின், சிகரெட், இறந்த உயிரிகளின் உடல்கள் உள்ளிட்டவை 10 சதவீதம் உள்ளன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, குப்பைக் கிடங்குகளில், அறிவியலுக்கும் சட்டத்திற்கும் எதிரான முறையில் கொட்டப்படுகிறது. உயிர் குப்பையுடன், பாட்டரி, பிளாஸ்டிக், குழல் விளக்குகள், மருந்துகள் உள்ளிட்டவை கலந்து, நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, அங்குள்ள மக்களையும், உயிர்ச்சூழலையும் பாதிக்கிறது. மின்னணு குப்பை, பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் கடைகளில் கொடுத்து, மறுசுழற்சியை ஊக்குவிக்கலாம். உயிர்க்குப்பையை, இயற்கை உரமாக மாற்றி, நாம் வளர்க்கும் தோட்டச் செடிகளுக்கு உரமாக்கலாம் அல்லது விற்பனை செய்யலாம். அதற்கு, தனி நபராகவோ, அடுக்கு மாடி குழுவாகவோ செயல்படுத்தும் வகையில், எளிய கருவிகளை கொண்ட தொழில்நுட்பங்கள் உள்ளன.

காம்பா பானைகள்

பூமியில் உள்ள உயிர் குப்பையை, நுண்ணுயிர்கள் தான் சிதைத்து, அதன் அளவில் 10 சதவீதமாக குறைக்கிறது. அதே முறையில், மூன்று காம்பா பானைகளை கொண்டு உரமாக மாற்றலாம். குப்பை சிதைக்கப்படுவதற்கு, காற்றும், நீரும் அவசியம். காய்கறி உள்ளிட்ட உணவு கழிவுகளிலேயே, நீர் அதிகம் உள்ளது. காற்று உட்புக, காம்பா பானைகளில் சிறு சிறு துளைகள் இடப்பட்டுள்ளன.

செய்முறை

தலா ஒரு அடி உயரமும் விட்டமும் உள்ள மூன்று காம்பா பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். மேல் உள்ள பானையில், உயிர் குப்பைகளை இட்டு, மூடி விட வேண்டும். பின், சிதைக்கும் பொடி (டீகம்போசிங் பவுடர்) என்ற, நுண்ணுயிர் பொடியை துாவ வேண்டும். குப்பை, மேல் பானையில் நிரம்பியவுடன், அதனை நடுவில் மாற்றி, நடு பானையை மேல் கொண்டு வரவேண்டும். அதன் பின், கீழ் பானையை மேலே கொண்டு வரவேண்டும். இவ்வாறு, மூன்று பானைகளும் நிரம்ப ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும். இந்த காலகட்டத்திற்குள், அடிப்பானையில் உள்ள குப்பை, நல்ல இயற்கை உரமாக மாறி விடும். குப்பையில், ஈரப்பதம் அதிகம் இருந்தால், துர்நாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரங்களில், சிதைக்கும் பொடியை அதிகம் துாவி, கிளறும் கருவியால் அடிக்கடி கிளறி விட வேண்டும். அந்த பிரச்னை தீர்ந்து விடும்.எல்லா குப்பைகளையும், ஒரே பிளாஸ்டிக் பையில் கட்டி, குப்பை தொட்டியில் வீசியே பழகிய நமக்கு, இந்த குப்பை பிரிக்கும் முறை துவக்கத்தில் சிரமமாக தான் இருக்கும். உரம் தயாரித்து, தாவரங்களை வளர்க்க பழகி விட்டால், அது, நமக்கு பிடித்த பழக்கமாக மாறிப்போகும். அடுக்கு மாடி குடியிருப்புகளில், மொத்தமாக குப்பையை மக்க வைக்கும், தொழில் நுட்பத்தில் அமைந்த கருவிகளும், அவற்றை பராமரிக்கும் ஆட்களும் இருக்கின்றனர். அவர்கள் மூலம், மாதம் ஒரு முறை, செலவில்லாமல், நல்ல இயற்கை உரத்தை தயாரிக்கலாம். கம்பா பானைகள் மூன்றின் விலை, 2,100 ரூபாயும், அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தமாக வாங்கும் கருவிக்கு, ஒரு வீட்டிற்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் ஆகும். இவை, ஒரே முறை செய்யப்படும் முதலீடு. இவ்வாறு அவர் கூறினார்

தொடர்புக்கு: 98400- 82607


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.