தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மட்டும் உறுதியாகியுள்ளது. இன்னொருபுறம் மக்கள் நல கூட்டணி பிரசாரத்தை தொடங்கிவிட்டது. இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர். நேற்று பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர். நேற்றிரவு 10 மணியளவில் பிரகாஷ் ஜவடேகர் திடீர் என்று கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சரத்குமாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக அவர் பேச்சு நடத்தினார். அப்போது பாஜக கூட்டணியில் இணைவது என்று சமத்துவ மக்கள் கட்சி முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார் ஜவடேகர். இந்த சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது அவர் கூறியதாவது:-
5 கட்சிகள்... பாஜக கூட்டணியில் சேர 5 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. பாஜக தலைமையில் பலம் மிக்க கூட்டணி உருவாக்கப்படும்.தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை... தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி மாற்று சக்தியாக உருவெடுக்கும்.
திமுக - காங். கூட்டணி... திமுக- காங். கூட்டணி இயல்பாக சேர்ந்தது அல்ல, இயலாமையால் சேர்ந்தது. இதேபோல், மக்கள் நலக்கூட்டணியில் மக்களும் இல்லை, நலனும் இல்லை.
வெற்றிக்கனி... தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்தில் வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுப்பார்' என்றார்.
No comments:
Post a Comment