Latest News

  

288 தமிழர்களை விடுவிக்க உதவியது நான்தான்... ஆந்திர வழக்கறிஞர் பரபரப்புப் பேட்டி


ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் இருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 288 அப்பாவித் தமிழர்களை ஆந்திர அரசும், காவல்துறையும் மிகக் கொடூரமாக, மோசமாக, விலங்குகளைப் போல நடத்தியது. அதைக் கண்டு ரத்தம் கொதித்துப் போய்தான் இந்த வழக்கை நான் கையில் எடுத்து நடத்தினேன். இதில் எனக்கு தமிழக அரசு 2 வக்கீல்களை நியமித்து உதவியது. ஆனால் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உரிமை கொண்டாடுவது வியப்பாக உள்ளது என்று பரபரப்பான இந்த வழக்கை நடத்திய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரந்தி சைதன்யா என்பவர் கூறியுள்ளார். தமிழர்களை மீட்கவோ அல்லது அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளைச் செய்யவோ தமிழகத்திலிருந்து பெரிய அளவில் யாரும் உதவிக்கு வராதது வருத்தம் அளித்ததாகவும், அப்பாவித் தமிழர்கள் மீது பரிதாபப்பட்டு தானே முன்வந்து இந்த வழக்கை நடத்த முடிவு செய்ததாகவும் கிரந்தி சைதன்யா கூறியுள்ளார். இந்த 288 பேரின் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என்று கட்சிகள் இப்போது அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போதும், கிரந்தி சைதன்யா சொல்வதைப் பார்க்கும்போதும், இதிலும் அரசியல் புகுந்து அசிங்கப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

கிரந்தி சைதன்யா வழக்கறிஞர் கிரந்தி சைதன்யா ஆந்திர மாநில சிவில் விடுதலைக் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இந்த வழக்கை நடத்த அவர் தமிழக அரசிடமோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்தோ ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லையாம். இலவசமாகவே நடத்தியுள்ளார்.

2 தமிழக அரசு வக்கீல்கள் அவருக்கு உதவி புரிய தமிழக அரசு முகம்மது ரியாஸ் மற்றும் அருள் என இரு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. மேலும் வேலூரைச் சேர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த வழக்கில் சத்தமில்லாமல் சைதன்யாவுக்கு உதவியுள்ளன.

கண்டு கொள்ளாத கட்சிகள் இதுதான் நடந்தது என்றும் வேறு எந்த அரசியல் கட்சியும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்றும், உண்மையில் இந்தத் தமிழர்கள் பாவப்பட்டவர்கள் என்றும் ஆந்திர மாநில வனத்துறை மற்றும் காவல்துறையால் இவர்கள் மிகுந்த வேதனைகளைச் சந்தித்து விட்டதாகவும் சைதன்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக சைதன்யா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கொடூரமாக நடத்தப்பட்ட தமிழர்கள் இந்த வழக்கில் தமிழர்களை ஆந்திர போலீஸ் மிகவும் மோசமாக நடத்தியது. நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் போது கூட உறவினர்களிடம் கூட பேச அனுமதிக்க மாட்டார்கள். நீதிமன்றத்தில் இவர்கள் கொண்டு வரப்படும் வாகனங்களின் ஜன்னல்களைக் கூட அடைத்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தினர் ஏதாவது கொடுப்பதற்கு கூட அனுமதிக்க இருக்காது.

விலங்குகள் போல நடத்தினர் ஏழ்மையான அவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து உறவினர்களை பார்க்க வந்திருப்பார்கள். குற்றவாளியாக இருந்தாலும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆந்திர போலீஸ் அதனை செய்யவில்லை. அத்தனை தமிழர்களையும் விலங்குகள் போலத்தான் ஆந்திர போலீஸ் நடத்தியது.

மனம் பதை பதைத்தேன் இது எனது மனதை பாதித்தது. இந்த சமயத்தில்தான் இவர்களுக்காக வாதாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகும்போது நேரடியாக மிரட்டல்கள் வரவில்லையென்றாலும் மறைமுகமாக வரத்தான் செய்தது. ஆனால் நான் இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகிறது ஆள் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வழக்கில் ஆஜராகிறேன் என்றதும் ஆந்திர அரசு வழக்கறிஞர்தான் பயந்தார்.

திமுக உதவவில்லை இந்த வழக்கில் நான் ஆஜரானதும் எனக்காக தமிழக அரசு இரு வழக்கறிஞர்களை நியமித்திருந்தது. ஒருவர் முகமது ரியாஸ், மற்றொருவர் அருள். இவர்கள்தான் எனக்கு இந்த வழக்கில் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தனர். திமுக தரப்பில் இருந்து எந்த உதவியும் செய்யவில்லை.


சிரிப்புத்தான் வருகிறது தமிழர்கள் விடுதலை என்றதும்தான் திமுக வழக்கறிஞர்கள் சிலர் இங்கு வந்தார்கள். வந்ததும், நாங்கள்தான் செய்தோம் என்று சொன்னார்கள். இது எனக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சில தொண்டு அமைப்புகள் எங்களுக்கு உதவியாக இருந்தன. வேறு யாரும் உதவவில்லை.

உதவி செய்யாத தமிழக கட்சிகள் உண்மையில் இந்தத் தமிழர்களுக்கு தமிழகத்திலிருந்து எந்தக் கட்சியும் உதவவில்லை. இதுவே உண்மை. எனக்கு பணம் சம்பாதிக்க பல வழக்குகள் உள்ளன. எனது சொந்த விருப்பத்தில்தான் இந்த வழக்கில் ஆஜரானேன். இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றிலும் இலவசமாக இதை நடத்தினேன் என்றார் கிரந்தி சைதன்யா.

288 தமிழர்கள் முன்னதாக 288 தமிழர்களையும் திருப்பதியில் உள்ள 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கடந்த புதன்கிழமையன்று விடுதலை செய்து உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.

வழக்கின் பின்னணி மொத்தம் 438 பேர் மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 2013ம் ஆண்டு நடந்த வனத்துறை அதிகாரிகள் கொலை தொடர்பான வழக்கு இது. முதலில் 2 வனத்துறை அதிகாரிகளும் 20 பேர் கொண்ட செம்மரக் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டதாக வனத்துறை கூறிய புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

திரிக்கப்பட்ட எப்ஐஆர் ஆனால் திடீரென முதல் தகவல் அறிக்கையில் 438 பேர் என சேர்க்கப்பட்டது. இதுதான் காவல்துறைக்கு எதிராக மாறியது. திடீரென 438 பேராக குற்றம் சாட்டப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதி, அத்தனை பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 438 பேரில் 78 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். மீதமுள்ள 360 பேரில் 4 பேர் சிறார்கள். நான்கு பேர் காவலிலேயே இறந்து விட்டனர். மீதம் 352 பேர் மட்டுமே வழக்கை சந்தித்து வந்தனர். இதில் 288 பேர் தமிழர்கள் ஆவர். இவர்கள் திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.