வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகாவை வெளியுறவுத்துறையுடன் இணைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரம்
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2004–ம் ஆண்டு மே மாதம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகா என்ற பெயரில் புதிதாக ஓர் இலாகா உருவாக்கப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அவர்கள் மூலம் இந்தியாவில் வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் கல்வி, விஞ்ஞானம், சுகாதாரம், தொழில்நுட்பம் தொடர்பான உறவுகளை மேம்படுத்துவது போன்றவற்றுக்காக இந்த இலாகா உருவாக்கப்பட்டது. அப்போது வயலார் ரவி இந்த இலாகா பொறுப்பை கவனித்தார்.
இணைப்பு
பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகாவும் ஒப்படைக்கப்பட்டது. அவர் இரு இலாகாக்களின் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகார இலாகாவை வெளியுறவு இலாகா அமைச்சகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார்.
சுஷ்மா சுவராஜ்
இந்த தகவலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.
அதில், ‘‘வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகாவின் குறிப்பிடத்தக்க பணிகளை, வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்கள் செய்து முடித்துள்ள நிலையில், அந்த இலாகாவை வெளியுறவு இலாகாவுடன் இணைப்பதற்கு, சம்பந்தப்பட்ட இரு இலாகாக்களின் மந்திரி என்ற முறையில் பிரதமர் மோடிக்கு யோசனை தெரிவித்தேன். எனது யோசனையை ஏற்றுக்கொண்டு அதற்கு அவர் ஒப்புதல் அளித்து உள்ளார். எனவே இனிமேல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரங்களை வெளியுறவு இலாகா அமைச்சகம் கவனிக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், அதிகபட்ச ஆளுமைத்திறமையுடன் கூடிய சிறிய அளவிலான அரசாங்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment