பொங்கல் பண்டிகை
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகையின் போது கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன.
இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
12,624 சிறப்பு பஸ்கள்
அதன்படி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9–ந் தேதி 482 சிறப்பு பஸ்கள், 10–ந் தேதி 504 சிறப்பு பஸ்கள், 11–ந் தேதி 365 சிறப்பு பஸ்கள், 12–ந் தேதி 539 சிறப்பு பஸ்கள், 13–ந் தேதி 1,345 சிறப்பு பஸ்கள், 14–ந் தேதி 1,447 சிறப்பு பஸ்கள் என 9–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை மொத்தம் 4 ஆயிரத்து 682 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இதுதவிர, மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 9–ந் தேதி 516 சிறப்பு பஸ்கள், 10–ந் தேதி 608 சிறப்பு பஸ்கள், 11–ந் தேதி 621 சிறப்பு பஸ்கள், 12–ந் தேதி 892 சிறப்பு பஸ்கள், 13–ந் தேதி 2,080 சிறப்பு பஸ்கள், 14–ந் தேதி 3,225 சிறப்பு பஸ்கள் என 9–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை மொத்தம் 7 ஆயிரத்து 942 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மொத்தத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 9–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை 12 ஆயிரத்து 624 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
600 மாநகர சிறப்பு பஸ்கள்
இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பஸ்கள் 15–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை இயக்கப்படும்.
மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
காணும் பொங்கல் நாளான 17–ந் தேதி மெரினா கடற்கரை, வண்டலூர், மாமல்லபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
25 சிறப்பு முன்பதிவு மையங்கள்
300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044–24794709–க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


No comments:
Post a Comment