அதிரை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாக பராமரிப்பில் இருந்து வரும் செடியன் குளத்தில் தற்போது மழை நீர் நிரம்பி ஏரி போல் காட்சியளித்து வருகிறது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சாதி, மதம், இனம் பேதமின்றி தினமும் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து வருகின்றனர். இந்த குளத்தில் பெண்கள் குளிப்பதற்காக பிரத்தியோக கரைகள் அமைந்துள்ளது.
குளிப்பதற்காக பெண்கள் பயன்படுத்தி வரும் கரைகள் மறைவின்றி காணப்பட்டது. இதையடுத்து அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அதிரை அமீன் அவர்கள் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் சமூக ஆர்வலர் கமாலுதீன் மேற்பார்வையில், பெண்கள் குளிக்க பயன்படுத்திவரும் கரையை சுற்றி தனது சொந்த செலவில் தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்துள்ளார். சமூக அக்கறையுடன் செய்துகொடுத்த இவரது பணியை பலரும் பாராட்டுகின்றனர். குறிப்பாக குளிக்க பயன்படுத்தி வரும் அதிரை பகுதியை சேர்ந்த அனைத்து சமய பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் செடியன் குளத்தின் பாதையை இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குளிக்க வருவர்களும், ஈசிஆர் சாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களும், தெற்கு நோக்கி பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் இருளாக காட்சி தருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் குளத்தில் கரையை தொடும் அளவிற்கு தண்ணீர் அதிகமாக இருப்பதால் சிறுவர் உட்பட, ஆடு மாடுகள் குளத்தில் தவறி விழும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஆதலால் குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள மின் விளக்குகள் இல்லாத 3 மின்கம்பங்களில் உள்ளாட்சி அமைப்பின் இலவச மின்சாரத்தோடு அதிக வோல்டேஜில் மெர்க்குரி விளக்குகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்து தர தன்னார்வலர்கள் முயற்சியில் ஈடுபட வேண்டும். பெரிய ஜும்மா பள்ளி கமிட்டி நிர்வாகமோ அல்லது தெரு சங்கங்களோ அல்லது சமூக அக்கறை கொண்ட தன்னார்வாலர்கள் இணைந்தோ இந்த பணியை மேற்கொள்ளலாம் என பொதுநலனில் அதிக அக்கறை கொண்ட ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment